உழைக்கும் மக்களின் மே தின உறுதி மொழி – 2024 UNITE (தொழிற்சங்கங்கள்மற்றும்வெகுஜனஅமைப்புக்களின்ஒன்றியம்)(ஒன்றுபடுவோம்)

மே 4, 1886 அன்று, சிக்காகோவில் தொழிலாளர்கள் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் எட்டு மணி நேர வேலை கோரி ஒரு போராட்டத்தை நடத்தினர், பொலீசாரின் கொடூரமான அடக்குமுறையை எதிர்கொண்டு, எட்டு மணி நேர வேலை நாளை யதார்த்தமாக்க தங்கள் உயிர்களையும் உடல்களையும் ஈகம் செய்தனர். இலங்கையில் நாம் எட்டு மணி நேர வேலை விதிப்பை அனுபவிப்பது எங்கள் முன்னோடிகளின் போராட்டங்கள் மற்றும் ஈகங்களின் விளைவாகவே. உழைக்கும் மக்கள் என்ற வகையில் எங்கள் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக அது  மாறியது. ஒற்றை வேலைவாய்ப்பு சட்டம் என்ற போர்வையில், எட்டுமணி நேர வேலைக்கு ஆப்பு வைக்கும் நோக்கில், ஈகத்தால் வென்ற தொழிலாளர் உரிமைகளை கிழித்தெறியும் புதிய தொழிலாளர் சட்டத்தை அரசும் முதலாளிகளும் வரையும் நிலை மீளுருவாக்கம் பெறுகிறது.

இம் மே தினத்தில், உழைக்கும் மக்களாகிய நாமும் எமது குடும்பங்களும் ஆட்சிக்கட்டிலில் இருக்கும் ஜனாதிபதி, பாராளுமன்றம், அரசு ஆகியவற்றின் பரந்துபட்ட வன்முறைக்கு முகம் கொடுக்கிறோம். மேட்டுக்குடியினரின் ஊழலைகாப்பாற்ற நமது சட்டரீதியான சேமிப்புகள் சூறையாடப்படுகின்றன. எமது கடின உழைப்பு மற்றும் வரிப்பணத்தால் கட்டப்பட்ட பொதுச் சொத்துக்கள் – மின்சாரம், வங்கிகள், தொலைத்தொடர்பு, காப்பீடு, ரயில்வே, தபால், சுகாதாரம் மற்றும் பல்கலைக்கழகங்கள், எமது இயற்கை வளங்கள், கடல்வளம் எங்கள் எதிர்ப்பையும் மீறி தனியார் லாபத்திற்காக விற்கப்படுகின்றன. எமது இருப்பின் அடித்தளமான இலவசக் கல்வி, இலவச மருத்துவ சேவை ஆகியவை தகர்க்கப்பட்டு வருகின்றன. இலவசக் கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு மற்றும் கண்ணியமான வாழ்க்கை ஆகியவற்றை   சாத்தியமற்றதாக்கும் கட்டமைப்புகளை அரசாங்கம் உருவாக்கி வருகிறது. எங்கள் ஊதியங்களும் வருமானங்களும் தேக்கமடைந்துள்ளன; தனியார் க்ரோனி முதலாளிகளும் எங்களை பணிக்கமர்த்துபவர்களும் எமது உழைப்பை பிடுங்கிக் கொள்கிறார்கள்; எங்களுக்கு கண்ணியமான ஊதியத்தை வழங்க மறுக்கிறார்கள்.

தனியார் கடன் வழங்குநர்களின் நலன்களுக்காக செயற்படும் சர்வதேச நாணய நிதியம், ரணில் – ராஜபக்ச அரசு. பொது நலன்களில் அக்கறையின்றி, தங்களை வளப்படுத்த உருவாக்கப்பட்ட மோசமான கடனை திருப்பிச்செலுத்துவதற்காக, எமது பொருளாதாரத்தையும் சமூகத்தையும் நொருக்கும் நோக்கில் செயல்படுகிறது.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, அரசாங்கம் மற்றும் பிரதான அரசியல் கட்சிகள் கடன் மறுசீரமைப்பின் நியாயமற்ற தன்மையை உணர மறுக்கின்றனர்.

எமது ஓய்வூதிய நிதிகள் ஊடாக கடன் மறுசீரமைப்பு, எமது சம்பளத்தின் மீதான அதிகப்படியான வரிகள், எமது உழைப்பின் ஊடாக மூலதனத்தை பெருக்குதல் மற்றும் எமது தேசிய செல்வத்தை கைவிடுதல் போன்ற பெரும்  சுமைகளை உழைக்கும் மக்கள் தாங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதை எதிர்த்து நாம் வீதியில் இறங்கிபோராடும் போது, அரசு வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறது. நமது எதிர்ப்பை நசுக்குவதற்கு இணைய பாதுகாப்புச் சட்டம், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் போன்ற புதிய ஒடுக்குமுறை கட்டமைப்புகளை அரசு உருவாக்குகிறது.

இந்த மே தினத்தில், பலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் இனப்படு கொலைகளையும் நாம் நினைவில் கொள்கிறோம். மத்திய கிழக்கில் அதன் இராணுவ மற்றும் பொருளாதார மேலாதிக்கத்தை நிறுவும் நோக்கில், புதிய உலக வல்லரசு இஸ்ரேலிய அரசுக்கு முண்டு கொடுக்கும் வகையில், பலஸ்தீன மக்கள் மேலான இனப்படுகொலைகளை பூர்த்திசெய்ய தனது அனைத்து ஆயுதங்களையும் இராஜதந்திர அதிகாரத்தையும் பயன்படுத்துகிறது.

அதேவேளை, பலஸ்தீன மக்களுக்காக, உழைக்கும் மக்கள் உலகளாவிய எதிர்ப்பையும் தோழமையையும் வழங்கி ஒற்றுமைக்கரங்க்ளை நீட்டுவதையும் நாம் கவனத்தில் கொள்கிறோம். சிக்காகோவில் ஹேமார்க்கெட் போராட்டம் மற்றும் பல தசாப்தங்களாக நடந்த எதிர்ப்பு நடவக்கைகளை எதிர்கொண்டது போல, நவதாராளவாத அரச ஒடுக்குமுறையும் நவ-ஏகாதிபத்திய பொருளாதார கட்டமைப்புகளும் எப்போதும் உழைக்கும் மக்களிடமிருந்து எதிர்ப்பை எதிர்கொள்கின்றன என்பதை நாம் மறக்கவில்லை, இவ்வாறான எதிர்ப்பு நடவடிக்கைகளே எமது உரிமைகளையும் சுதந்திரங்களையும் வென்றெடுத்து எங்களுக்கு ஒரு கெளரவமான வாழ்க்கையை பெற்றுத் தந்துள்ளது. என்பதனை நினைவுகூருகிறோம்.

இந்த மே தினத்தில், பாலின வேறுபாடு, இனம் மற்றும் சாதி அடையாளங்கள் காரணமாக நம்மிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம்.

இலங்கையிலும் உலகிலும் உள்ள உழைக்கும் மக்களின் உடைமைகளை கபளீகரம் செய்யும் நவதாராளவாத அரசுக்கும், சர்வதேச உலக ஒழுங்கிற்கும் எதிரான போராட்டத்தை நாம் ஒன்றிணைந்து கட்டியெழுப்புவதோடு பின்வரும் உறுதிமொழிகளையும் எடுக்கின்றோம்.

  1. தனியார் கடன் வழங்குநர்களின் நலன்களுக்கு சேவை செய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைக்கு கீழ்ப்படியாமல், உழைக்கும் மக்களின் நலனுக்காக கட்டியெழுப்பப்பட்ட ஒரு பொருளாதாரத்திற்காகவும், உழைக்கும் மக்களை ஏதிலிகள் ஆக்காத ஒரு பொருளாதாரக்கட்டமைப்பை நோக்கியும்  போராடுவோம். எமது நாட்டை வங்குரோத்து ஆக்கியவர்களையும், நமது செல்வத்தை திருடியவர்களையும் பொறுப்பேற்க வலியுறுத்திப் போராடுவோம்.
  2. நாற்றமெடுக்கும் கடனை திருப்பிச் செலுத்துவதற்காக தனியார் கடன் வழங்குநர்களுடன் செய்யப்படும் இரகசிய ஒப்பந்தங்களுக்கு எதிராக போராடுவோம்.
  3. எமது ஊழியர் சேமலாப நிதியங்கள் களவாடப்படுவதையும், உழைக்கும் மக்கள் மீது திணிக்கப்பட்ட நியாயமற்ற சம்பள  வரி மற்றும் பெறுமதி சேர் வரியையும் தொடர்ந்து எதிர்ப்போம். ஏற்றுமதி இறக்குமதி கம்பனிகள் இலங்கையின்  மூலதனத்தைத் திருடுவதைத் தடுக்கும் முகமாக செல்வ வரி மற்றும் நிதிக் கட்டுப்பாடுகள் அமலாக்கம் கோரி  போராடுவோம்.
  4. தொழிலாளர் பாதுகாப்புகளை நீக்கும் உத்தேச ஒற்றை வேலைவாய்ப்பு சட்டத்தை நிறைவேற்றுவதை எதிர்ப்போம். தொழிலாளர்களைப் பாதுகாக்கும்   மற்றும் பணியிடங்களுக்குள் துன்புறுத்தல் இல்லாத கண்ணியமான சூழலுக்கான  சட்டங்களுக்காக போராடுவோம்.  வீட்டு வேலை செய்யும்  தொழிலாளர்கள் உட்பட அனைத்து பணிகள் செய்பவர்களையும்  தொழிலாளர்களாக அங்கீகரிக்கும் ஒரு வேலைவாய்ப்பு சட்ட கட்டமைப்பு, மற்றும் நிலையற்ற மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கான முதலாளிகளின் இலாபங்களிலிருந்து நிதியளிக்கப்படும் ஒரு சமூக பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்குதல்; முதலாளிகளின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பலியாகா வகையில்   தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை என்பவற்றுக்காக  போராடுவோம்.
  5. தோட்டத்தொழிலாளர்களின் குறைந்தபட்ச தினக்கூலியாக 2,000 ரூபா, அவர்களுக்கான  கண்ணியமான வீடு மற்றும் காணி உரிமைக்காக குரல் கொடுப்போம். 2,000 ரூபா பட்டினிச் சம்பளம் அல்ல, மாறாக அனைத்து தொழிலாளர்களுக்கும் வாழ்வாதார சம்பளமான குறைந்தபட்ச ஊதியம் தேவை என்று வலியுறுத்துவோம்.    கடனைக்காட்டி   கூலியை  மாற்றீடாக்க முடியாது.
  6. தொழிலாளர்களின் வேலை இழப்புக்கு முதலாளிகள் அல்லது அரசு இழப்பீடு வழங்கக் கோரி போராடுவோம்.
  7. அனைத்து மக்களுக்குமான சமூகப் பாதுகாப்பு மறுக்கப்படுவதற்கு எதிராக போராடுவோம்.
  8. பலஸ்தீன மக்களுக்கு எதிராக யுத்தம் புரியும்  இஸ்ரேல் போன்ற   நாடுகளுக்கும், கண்ணியமான மற்றும் பாதுகாப்பான வேலைக்கு உத்தரவாதம் அளிக்க முடியாத பிற நாடுகளுக்கும்  தொழிலாளர்களை அனுப்புவதை எதிர்ப்போம்.
  9. எமது மீனவர்கள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி கடலைப் பயன்படுத்துவதற்கும் ,  கடல்களையும் கடல் வளங்களையும் அந்நிய அரசின் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாப்பதற்கும், எமது சிறு விவசாயிகளின் பயன்பாட்டிற்காக எமது நிலங்கள் பாதுகாக்கப்படுவதற்கும், எமது விவசாயிகளின்  உற்பத்திகளுக்கு    நியாயமான விலை நிர்ணயத்துக்கும்  போராடுவோம்.
  10. தேசிய வளங்களை கட்டுப்பாடற்ற ஊழல் நிறைந்த விற்பனை செயற்பாட்டை நிறுத்த போராடுவோம். இயற்கை வளங்கள், நிலம், கடல் ஆகியவற்றை தாரை வார்க்கும் வகையில்    பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு (ETCA ) போன்ற ஜன நாயக மறுப்பு  ஒப்பந்தங்கள் வெளி நாட்டு தனியார் மூலதனத்தை ஊக்குவிக்கின்றன; விவசாயிகள், மீனவர்கள் மற்றும் தொழிலாளிகளை ஏதிலிகளாக்கும் அரச உடந்தையுடனான இந்த ஒப்பந்தங்களை எதிர்த்து குரல் கொடுப்போம்.
  11.  அனைத்து மக்களுக்கும் அனைத்துக் கல்வித்தரங்களிலும்  இலவசக்கல்வி உரிமை, தரமான  இலவச மருத்துவம், அனைத்து மக்களுக்குமான  சமூக நீதி  கேட்டுப்போராடுவோம். 
  12. புதிய தேசிய கல்விக் கொள்கையின் மூலம் கல்வி தனியார்மயமாக்கப்படுவதை எதிர்த்துப் போராடுவோம்.
  13. உழைக்கும் மக்களுக்கு அத்தியாவசிய மருந்து மற்றும் இன்றியமையாத மருத்துவ கவனிப்பை மறுக்கும் வகையில்,  இலவச  பொது சுகாதார அமைப்புமுறையை தகர்க்கும்  நடவடிக்கைகளுக்கு  எதிராகப்  போராடுவோம்.
  14.  ஊடகவியலாளர்களை,   பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை மௌனிக்காத   அரசொன்றைக் கோரி  போராடுவோம்.. ஜூலை 2022 இன் பின்  நியாயமற்ற மற்றும் சட்டவிரோதமாக தண்டிக்கப்பட்ட அனைவரையும்  நபர்களையும் பொய்யான குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்க போராடுவோம்.
  15.  பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்கான பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் போன்ற சட்டங்களை நிறைவேற்றுவதை எதிர்ப்போம்.  இணைய  பாதுகாப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஆகியவற்றை நிபந்தனையின்றி ரத்து செய்யக் கோரி போராடுவோம்.
  16. தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதற்கு அரசாங்கத்தை பொறுப்புக்கூற வைக்க போராடுவோம்.
  17.  அரசினால் நேரடியாகவும் மறைமுகமாகவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை பற்றி  அறியும் போராட்டத்தில் ஈடுபடும்  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் இணைந்து நிற்போம்.
  18. ஒரு  பாலின உறவுகளை குற்றமற்றதாக்குவதற்கும், LGBTQ சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவும்  மேம்படுத்தவும் போராடுவோம்.
  19.  நமது குழந்தைகளை போஷாக்கின்மையிலிருந்து  பாதுகாக்க போராடுவோம்.  அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு  சமத்துவமான பொருளாதார  சமூக நீதிச் சமூக கட்டமைப்பை உருவாக்கப் போராடுவோம்.
  20.  எதிர்கால சந்ததியினருக்காக எமது சுற்றுச்சூழலை   பாதுகாக்கும் பொருளாதார அமைப்புக்காகப்  போராடுவோம்.
  21.  இலங்கையின் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண  அனைத்து இனங்களையும் சேர்ந்த உழைக்கும் மக்களுடன் அரசியல் போராட்டங்களில் தொடர்ந்து ஈடுவோம்.

தேச எல்லகளுக்குள் குறுகிப்போவதில்லை எமது போராட்டம். நாமே  செல்வத்தின் சிற்பிகள்.  சமத்துவமான, நிலையான,  கருணை கொண்ட புதிய உலகைப்படைக்க உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களுடன் சேர்ந்து நாம்  போராடுகிறோம். உழைக்கும் மக்களுக்கே அதிகாரம்!

Loading