இலங்கையில் 22 தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான நீதிமன்ற வழக்கை வாபஸ் பெறு!

https://www.change.org/p/withdraw-the-court-case-against-22-plantation-workers-in-sri-lanka

வெளியீட்டிற்கான அறிமுகம்

இலங்கையில் தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழு (PWAC) நாட்டின் மத்திய பெருந்தோட்ட மாவட்டத்திலுள்ள மஸ்கெலியாவில் உள்ள சாமிமலையின் ஓல்டன் தோட்டத்தைச் சேர்ந்த 22 தொழிலாளர்கள் மற்றும் இரண்டு இளைஞர்களுக்கு எதிரான நீதிமன்ற வழக்கை விலக்கிக்கொள்ளக் கோரும் மனுப் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. நாளாந்த சம்பளம் 1,000 ரூபா கோரி தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது அவர்களின் வகிபாகம் சம்பந்தமாகவும் நிர்வாகத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளை எதிர்த்தமைக்காகவும் அவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற வழக்கு ஒரு சோடிக்கப்பட்டதாகும். மனுவில் தேவையான பிற விபரங்களுடன் உங்கள் கையொப்பத்தை இடுமாறும் தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவின் பிரச்சாரத்தை ஆதரிக்குமாறும் நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கின்றோம்.

கனம்!

திரு. சஞ்சய் இராஜரட்ணம், 

சட்டமா அதிபர், 

இல.159, புதுக்கடை, 

கொழும்பு-12 

அன்பின் ஐயா,

ஹட்டன் நீதவான் நீதிமன்றில் வழக்கு இலக்கம் B 34932/21 இன் கீழ் ஓல்டன் தோட்டத்தைச் சேர்ந்த 22 தொழிலாளர்கள் மற்றும் இரண்டு இளைஞர்கள் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள சோடிக்கப்பட்ட வழக்கை விலக்கிக்கொள்ளுமாறு விடுக்கும் கோரிக்கை

கீழ் கையொப்பமிட்டுள்ள மஸ்கெலியா சாமிமலையில் அமைந்துள்ள ஹொரண பெருந்தோட்டக் கம்பனிக்கு சொந்தமான ஓல்டன் தோட்டத்திலும் ஏனைய தோட்டங்களிலும் வேலை செய்யும் தொழிலாளர்களும் உலகம் முழுதும் உள்ள தொழிலாளர்களும், பின்வரும் விடயங்களை தங்கள் பரிசீலனைக்கு முன்வைப்பதுடன், மேற்கூறிய தோட்டத்தின் 22 தொழிலாளர்கள் மற்றும் இரண்டு இளைஞர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள B34932/21 என்ற இலக்கத்துக்குரிய வழக்கை விலக்கிக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். 

1. ஓல்டன் தோட்டத்தின் முகாமையாளர் சத்தியமூர்த்தி சுபாஷ் நாராயணன் செய்த பொய் முறைப்பாட்டின் பேரில், இந்த நபர்கள் 18 பெப்ரவரி 2021 மற்றும் 09 மார்ச் 2021 ஆகிய திகதிகளுக்கு இடையில் கைது செய்யப்பட்டு, ஹட்டன் நீதவான் முன்நிலையில் முற்படுத்தப்பட்டு 10 மார்ச் 2021 அன்று கடுமையான நிபந்தனைகளின் கீழ் பிணையில் விடுவிக்கப்பட்டனர். 

மேற்படி முகாமையாளரை உடல் ரீதியாக தாக்கி பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்ததாக இந்த பாதிக்கப்பட்டவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்த முகாமையாளர் பெப்ரவரி 2 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். இவ்வாறான துன்புறுத்தலை எதிர்த்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்ததுடன் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி அவரது இல்லத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்ட முகாமையாளர், சம்பள உயர்வு கோரி சட்டப்பூர்வமாக வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களைப் பழிவாங்குவதற்காக, பொலிஸில் முறைப்பாடு செய்தார். 

இந்த முறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் மீதான பொய்யான குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

2. பிணையில் விடுவிக்கப்பட்ட இந்தத் தொழிலாளர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டு வருகின்றனர். முதலில், வழக்குத் தொடர்ந்த பொலிசார், விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாக கூறினர். பின்னர் விசாரணை அறிக்கை உங்கள் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். ஒவ்வொரு முறையும், உங்கள் அலுவலகம் இதுவரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்று பாதிக்கப்பட்ட தொழிலாளர்களிடம் கூறப்படுகின்றது.

இந்த வழக்கு, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு 15 மார்ச் 2023 அன்று அழைக்கப்பட்டபோது, அது ஜூன் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த பொய்யான குற்றச்சாட்டினால் தொழிலாளர்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்கின்றார்கள். 

3. ஹொரண பெருந்தோட்டக் கம்பனி, 38 தொழிலாளர்களை எந்தவித விசாரணையும் இன்றி வேலை நீக்கம் செய்துள்ளது. இந்த எதேச்சதிகாரமான வேலைநீக்கத்திற்கு எதிரான வழக்கு, ஹட்டனில் உள்ள தொழில் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த உண்மைகளை பரிசீலித்து, ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் ஓல்டன் தோட்ட முகாமையாளரால் இவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டுகளை விலக்கிக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இது தொடர்பாக 1 மே 2021 அன்று அறிக்கையை வெளியிட்டு தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழு ஆரம்பித்துள்ள பகிரங்க பிரச்சாரத்திற்கு நாங்கள் ஆதரவளிக்கின்றோம். 

Loading