By Raju Prabath Lankaloka

தற்போது, அதிகமான மக்கள் மார்க்சியம் அல்லது அறிவியல் சோசலிசம் பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சில தசாப்தங்களாக, முதலாளித்துவ ஊடகங்கள் அதற்கெதிராக மேற்கொண்ட பாரிய பரப்புரைகளால், உண்மையான மார்க்சியத்தின் கருத்துக்களை அறிந்து கொள்வதில் மக்களிடையே குறைந்த அளவிலான ஆர்வம் இருந்தது, ஸ்ராலினிசச் சீரழிவால் தோற்றுவிக்கப்பட்ட சோசலிசம் மீதான தவறான எண்ணங்கள், மற்றும் பழைய இடது கட்சிகள் மற்றும் தற்போதைய குட்டி முதலாளித்துவ அமைப்புகளின் தொடர்ச்சியான துரோகங்கள் மற்றும் அரசியல் தவறுகள், . ஆனால் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் முதலாளித்துவம் வீழ்ச்சியடைந்து வருவதால், பாதிக்கப்பட்ட மக்கள் மாற்று வழியைக் கண்டறியும் முயற்சியில் மார்க்சியத்தின் பக்கம் திரும்புவதைக் காணலாம்.

வர்க்க இயக்கத்திற்கு மார்க்சியக் கருத்துக்கள், பகுப்பாய்வுகள் மற்றும் அந்தக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட முன்னோக்குகளை வழங்குவது ‘முன்னோக்கி’யின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

1847 இல் ஏங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் லீக்கிற்கான இரண்டு வரைவு நிரல்களை கேள்வி பதில் வடிவில் எழுதினார். பிந்தையது, கம்யூனிசத்தின் கோட்பாடுகள் என்று அறியப்படுகிறது, இது முதலில் 1914 இல் வெளியிடப்பட்டது மற்றும் 25 கேள்விகள் மற்றும் பதில்களைக் கொண்டிருந்தது. உரையில், மார்க்சியத்தின் முக்கிய கருத்துகளான வரலாற்று பொருள்முதல்வாதம், வர்க்கப் போராட்டம், பாட்டாளி வர்க்கப் புரட்சி போன்றவற்றை எங்கெல்ஸ் முன்வைக்கிறார், மார்க்சும் ஏங்கெல்சும் கம்யூனிஸ்ட் அறிக்கையில் மேலும் விரிவாகக் கூறியுள்ளனர்.

மார்க்சியம் என்று பிரபலமாக அறியப்படும் அறிவியல் சோசலிசத்தின் பரந்த அம்சங்களை விளக்கும் அசல் படைப்புகளைக் குறிப்பிடுவது மிகவும் முக்கியம் என்பதால், எங்கெல்ஸின் கம்யூனிசக் கொள்கைகளை இங்கிருந்து பகுதிகளாக வெளியிட முடிவு செய்துள்ளோம். இது அந்தத் தொடரின் இறுதி பகுதி

இந்தத் தொடரின் முந்தைய பகுதியை இங்கே காணலாம்.

https://m.facebook.com/story.php?story_fbid=185892814005933&id=100077556467839

……………………………………………………………………………………………………………………………………………………………

21. கம்யூனிச சமுதாயம் குடும்பத்தின் மீது எத்தகைய செல்வாக்குச் செலுத்தும்?

பாலின உறவு என்பது அதில் ஈடுபட்டுள்ள நபர்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட ஒன்றாகும்; சமுதாயம் அதில் தலையிட எவ்வித அவசியமும் இல்லை. எனவே [கம்யூனிச சமுதாயம்] பாலினங்களுக்கு இடையிலான உறவுகளை முற்றிலும் தனிப்பட்ட விவகாரமாக மாற்றியமைக்கும். இதனைச் செய்ய முடிவதற்குக் காரணம் அது தனியார் சொத்துடைமையை ஒழித்துக் கட்டுகிறது. மேலும், குழந்தைகளுக்குச் சமுதாய அடிப்படையில் கல்வி கற்பிக்கிறது. இவ்வாறாக, பாரம்பரிய திருமண முறையின் இரண்டு அடித்தளங்களை – தனியார் சொத்துடைமையில் வேர்கொண்டுள்ள சார்புத் தன்மையை – மனைவி கணவனைச் சார்ந்திருப்பதையும், குழந்தைகள் பெற்றோரைச் சார்ந்திருப்பதையும் தகர்த்தெறிகிறது.

”பெண்கள் பொதுவாக்கப்படுவதற்கு” எதிராக, உயர்ந்த ஒழுக்கநெறி பசப்பும் அற்பவாதிகள் எழுப்புகின்ற கூக்குரலுக்கு பதில் இதோ. பெண்களைப் பொதுவாக்கும் நிலைமை முற்றிலும் முதலாளித்துவ சமுதாயத்துக்கு உரியதாகும். இன்றைக்கு அது விபச்சாரம் என்னும் வடிவில் முழுமையாக வெளிப்படுகிறது. ஆனால், விபச்சாரம் தனியார் சொத்துடைமையை அடித்தளமாகக் கொண்டது. எனவே, தனியார் சொத்துடைமையோடு சேர்ந்து விபச்சாரமும் உதிர்ந்து போகும். ஆக, கம்யூனிச சமுதாயம் பெண்களைப் பொதுவாக்கும் நடைமுறைக்கு மாறாக, உண்மையில் அம்முறைக்கு முடிவு கட்டுகிறது.

22. தற்போது நிலவும் தேசிய இனங்களைப் பொறுத்தவரைக் கம்யூனிசத்தின் அணுகுமுறை என்னவாக இருக்கும்?

பல்வேறு நில மற்றும் வர்க்கப் பாகுபாடுகள் அவற்றின் ஆணி வேரான தனியார் சொத்துடைமை ஒழிக்கப்படும்போது மறைந்தே தீர வேண்டும். அதுபோலவே, கூட்டுச் சமுதாயக் கோட்பாட்டின்படி தங்களை இணைத்துக் கொண்ட மக்களின் தேசிய இனங்கள், இந்தக் கூட்டிணைப்பின் விளைவாகத் தமக்குள் ஒன்றோடொன்று கலந்து வாழவும், அதன் மூலமாகத் தம்மைத் தாமே கரைத்துக் கொள்ளவும் நிர்ப்பந்திக்கப்படும்.[3]

23. தற்போது நிலவும் மதங்களைப் பொறுத்தவரை அதன் அணுகுமுறை என்னவாக இருக்கும்?

இதுவரை நிலவி வந்துள்ள மதங்கள் அனைத்தும், தனிப்பட்ட ஒரு மனித இனத்தின் அல்லது மனித இனக் குழுக்களின் வரலாற்று ரீதியான வளர்ச்சிக் கட்டங்களின் வெளிப்பாடாகவே இருந்துள்ளன. ஆனால் கம்யூனிசம் என்பது தற்போது நிலவுகின்ற மதங்கள் அனைத்தையும் தேவையற்றவை ஆக்கி அவற்றின் மறைவுக்கு வழிவகுக்கின்ற, வரலாற்று ரீதியான வளர்ச்சிக் கட்டம் ஆகும்.[4]

24. கம்யூனிஸ்டுகள் சோஷலிஸ்டுகளிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகின்றனர்?

சோஷலிஸ்டுகள் எனச் சொல்லப்படுவோரை மூன்று வகையினமாகப் பிரிக்கலாம்.

பிற்போக்குச் சோஷலிஸ்டுகள்:

முதல் வகையினம் நிலப்பிரபுத்துவ மற்றும் தந்தைவழி சமுதாயத்தின் ஆதரவாளர்களைக் கொண்டது. இந்தவகைச் சமுதாயமோ, பெருவீதத் தொழில்துறை, உலக வாணிகம் ஆகியவற்றாலும் மற்றும் இவற்றால் தோற்றுவிக்கப்பட்ட முதலாளித்துவ சமுதாயத்தாலும் அழிக்கப்பட்டுவிட்டது. இன்னும் நாள்தோறும் அழிக்கப்பட்டு வருகிறது. இன்றைய சமுதாயத்தின் தீமைகளைக் கண்ணுறும் இந்த முதல் வகையினம், நிலப்பிரபுத்துவ மற்றும் தந்தைவழிச் சமுதாயம் இந்தத் தீமைகளின்றி இருந்தபடியால், அத்தகைய சமுதாயத்தை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்னும் முடிவுக்கு வருகிறது. அவர்களது பரிந்துரைகள் அனைத்தும் ஏதோ ஒருவகையில் இந்த முடிவை நோக்கியே முன்வைக்கப்படுகின்றன.

பிற்போக்கு சோஷலிஸ்டுகளான இந்த வகையினர், என்னதான் பாட்டாளி வர்க்கத்தின் துன்பங்களுக்காக ஆதரவு வேடம் போட்டாலும், நீலிக் கண்ணீர் வடித்தாலும், கீழ்க்காணும் காரணங்களுக்காக அவர்களைக் கம்யூனிஸ்டுகள் வன்மையாக எதிர்க்கின்றனர்:

(1) இந்த வகையினம் முற்றிலும் சாத்தியமற்ற சிலவற்றுக்காக முயல்கின்றது.

(2) பிரபுக்குலத்தார், கைவினைக் குழும எஜமானர்கள், சிறு உற்பத்தியாளர்கள் மற்றும் எதேச்சாதிகார அல்லது நிலப்பிரபுத்துவ முடியசர்களின் அடிவருடிகள், அதிகாரிகள், படைவீரர்கள் மற்றும் பாதிரியார்கள் ஆகியோரின் ஆட்சியை மீண்டும் நிலைநாட்ட முயன்று வருகின்றது. அந்தச் சமுதாயத்தில் நிச்சயமாக இன்றைய சமுதாயத்தின் தீமைகள் இருக்கவில்லை. ஆனால், குறைந்தபட்சம் இதே அளவுக்கான வேறுபல தீமைகளைக் கொண்டிருந்தது. ஒடுக்கப்பட்ட தொழிலாளர்கள் ஒரு கம்யூனிசப் புரட்சியின் மூலம் விடுதலை பெறுவதற்கான வாய்ப்பையும்கூட அச்சமுதாயம் வழங்கப் போவதில்லை.

(3) பாட்டாளி வர்க்கத்தினர் புரட்சிகரமாகவும் அல்லது கம்யூனிஸ்டாகவும் மாறியதுமே, உடனடியாக இந்தப் பிற்போக்கு சோஷலிஸ்டுகள் பாட்டாளிகளுக்கு எதிராக, முதலாளித்துவ வர்க்கத்துடன் கைகோத்துக் கொண்டு, தங்களின் உண்மையான சொரூபத்தைக் காட்டுகிறார்கள்.

முதலாளித்துவ சோஷலிஸ்டுகள்:

இரண்டாவது வகையினம், இன்றைய [முதலாளித்துவ] சமுதாயத்தின் ஆதரவாளர்களைக் கொண்டதாகும். இவர்கள், தவிர்க்க முடியாமல் அதிகரித்துவரும் இந்தச் சமுதாயத்தின் தீமைகளைக் கண்டு அதன் எதிர்காலம் குறித்த அச்சத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்தச் சமுதாயத்தின் உட்பொதிந்த ஒரு பகுதியாக விளங்கும் தீமைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள விரும்பும் அதே வேளையில் இந்தச் சமுதாய அமைப்பை அப்படியே தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறார்கள்.

இந்த நோக்கத்துடன் அவர்களில் சிலர் வெறும் நலவாழ்வு நடவடிக்கைகளை முன் வைக்கின்றனர். வேறு சிலர் சமுதாயத்தை மறுசீரமைத்தல் என்கிற சாக்கில் ஆரவாரமான சீர்திருத்த அமைப்புகளுடன் களத்தில் நிற்கின்றனர். உண்மையில் இச்சீர்திருத்த அமைப்புகள், இப்போது நிலவுகின்ற [முதலாளித்துவ] சமுதாய அமைப்பின் அடித்தளங்களை, அதன்வழியே இன்றைய வாழ்க்கைமுறையை அப்படியே பாதுகாத்து வைப்பதை நோக்கமாகக் கொண்டவை ஆகும்.

கம்யூனிஸ்டுகள் இந்த முதலாளித்துவ சோஷலிஸ்டுகளை எதிர்த்து இடைவிடாது தொடர்ந்து போராட வேண்டும். காரணம் அவர்கள் கம்யூனிஸ்டுகளின் எதிரிகளுக்காக வேலை செய்கிறார்கள். கம்யூனிஸ்டுகள் தூக்கியெறிய முனையும் சமுதாயத்தைத் தூக்கி நிறுத்துகிறார்கள்.

ஜனநாயக சோஷலிஸ்டுகள்:

இறுதியாக, மூன்றாவது வகையினம், ஜனநாயக சோஷலிஸ்டுகளைக் கொண்டதாகும். இவர்கள் கேள்வி 18-இல் விவரித்தபடி, கம்யூனிஸ்டுகள் எடுத்துரைக்கின்ற அதே நடவடிக்கைகளில் சிலவற்றை ஆதரிக்கின்றனர். கம்யூனிசத்துக்கு மாறிச் செல்லுவதன் பகுதியாக அல்ல. எனினும், அத்தகைய நடவடிக்கைகள் இன்றைய சமுதாயத்தின் துன்பங்களையும் தீமைகளையும் ஒழிக்கப் போதுமானவை என்று அவர்கள் நம்புகின்றனர்.

இந்த ஜனநாயக சோஷலிஸ்டுகள் ஒன்று, தமது வர்க்கத்தின் விடுதலைக்கான நிபந்தனைகள் குறித்து இன்னும் போதுமான தெளிவு பெறாத பாட்டாளிகளாக இருக்கின்றனர். அல்லது, குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதிகளாய் உள்ளனர். இந்த வர்க்கத்துக்கு, ஜனநாயகத்தை வென்றெடுப்பதற்கும், அதன்மூலம் சோஷலிஸ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் முன்னதாகப் பாட்டாளி வர்க்கத்தோடு பல்வேறு நலன்கள் பொதுவாக இருக்கக் காணலாம்.

ஜனநாயக சோஷலிஸ்டுகள் ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தின் சேவையில் இறங்கிக் கம்யூனிஸ்டுகளைத் தாக்காத வரையில், போராட்டத் தருணங்களில், இந்த சோஷலிஸ்டுகளுடன் கம்யூனிஸ்டுகள் ஓர் உடன்பாடு காண வேண்டியிருக்கும் என்பதும், பொதுவாக, முடிந்த அளவுக்கு அவர்களுடன் ஒரு பொதுக் கொள்கையை எட்ட வேண்டியிருக்கும் என்பதும் இதிலிருந்து பெறப்படுகிறது.

போராட்ட நடவடிக்கையில் இந்த வடிவிலான ஒத்துழைப்பு, அவர்களுடனான கருத்துவேறுபாடுகளை விவாதிப்பதை விலக்கிவிடவில்லை என்பது தெளிவு.

25. நம் காலத்திய இதர அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறை என்ன?

இந்த அணுகுமுறை நாட்டுக்கு நாடு வேறுபடும்.

முதலாளித்துவ வர்க்கம் ஆட்சிபுரியும் இங்கிலாந்து, ஃபிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளில் கம்யூனிஸ்டுகள் பல்வேறு ஜனநாயகக் கட்சிகளுடன் இன்னும்கூடப் பொதுவான நலனைக் கொண்டுள்ளனர். அவர்கள் சொந்தம் கொண்டாடும் சோசலிஷ நடவடிக்கைகள் எந்த அளவுக்கு அதிக நெருக்கமாக கம்யூனிஸ்டுகளின் நோக்கங்களை எட்டுவதாக இருக்கின்றனவோ – அதாவது, எந்த அளவுக்கு அதிகத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் அவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை ஆதரித்து நிற்கின்றனரோ அந்த அளவுக்கு அதிகமாக அவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் ஆதரவைச் சார்ந்திருக்கின்றனர். எடுத்துக்காட்டாக, இங்கிலாந்தில் தொழிலாளர் வர்க்கச் சாசனவாதிகள்[5] ஜனநாயகக் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினர் அல்லது தீவிரக் கொள்கையினர் (Radicals) என்று சொல்லப்படுவோரைக் காட்டிலும் வரம்பிலா அளவுக்கு கம்யூனிஸ்டுகளுடன் நெருக்கமாக இருக்கிறார்கள்.

ஜனநாயக அரசமைப்புச் சட்டம் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப் பட்டுள்ள அமெரிக்காவில், இந்த அரசமைப்புச் சட்டத்தை முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராகத் திருப்பி, அதனைப் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்காகப் பயன்படுத்தும் கட்சியுடன், அதாவது தேசிய விவசாயச் சீர்திருத்தவாதிகளுடன்[6], கம்யூனிஸ்டுகள் இணைந்து பணியாற்ற வேண்டும்.

சுவிட்சர்லாந்தில், மிகுந்த கலப்படக் கட்சியாக இருந்த போதிலும், தீவிரக் கொள்கையினர் (The Radicals) மட்டுமே கம்யூனிஸ்டுகள் ஒத்துழைக்கக் கூடிய ஒரே குழுவாகும். இந்தத் தீவிரக் கொள்கையினருள் வாட் (Vaudois) மற்றும் ஜெனீவா (Genevese) நகரைச் சார்ந்தவர்களே மிகவும் முற்போக்கானவர்கள் ஆகும்.

இறுதியாக, ஜெர்மனியில் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் எதேச்சாதிகார முடியாட்சிக்கும் இடையிலான போராட்டமே இன்றைக்கு தீர்மானகரமான போராட்டம் ஆகும். முதலாளித்துவ வர்க்கம் ஆட்சிப் பொறுப்பில் இல்லாத வரையில், கம்யூனிஸ்டுகள் தங்களுக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையேயான தீர்மானகரமான போராட்டத்தில் இறங்க முடியாது. எனவே, முதவாளித்துவ வர்க்கத்தை வெகுவிரைவில் வீழ்த்தும் பொருட்டு, எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் முதலாளித்துவ வர்க்கம் ஆட்சியில் அமர அவர்களுக்கு உதவுவது கம்யூனிஸ்டுகளின் நலன்களுக்கு உகந்ததாகும். ஆகவே, அரசாங்கங்களுக்கு எதிராக, கம்யூனிஸ்டுகள் தீவிர மிதவாதக் கட்சியைத் (radical liberal party) தொடர்ந்து ஆதரிக்க வேண்டும். அதேவேளை, முதலாளித்துவ வர்க்கத்தின் சுய ஏமாற்றுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், முதலாளித்துவ வர்க்கத்தின் வெற்றி பாட்டாளி வர்க்கத்துக்குச் சாதகமான பலன்களைத் தரும் என்னும் கவர்ச்சியூட்டும் உறுதிமொழிகளை நம்பி ஏமாறாமல் இருக்கவும் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். முதலாளித்துவ வர்க்கத்தின் வெற்றியிலிருந்து கம்யூனிஸ்டுகள் தருவித்துக் கொள்ளக்கூடிய சாதகமான கூறுகள் கீழே காண்பவற்றை மட்டுமே உள்ளடக்கியிருக்கும்:

(1) [கம்யூனிஸ்டுகளுக்குக் கிடைக்கும்] பல்வேறு சலுகைகள், பாட்டாளி வர்க்கத்தை ஒரு கச்சிதமான, போர்க்குணம் கொண்ட, ஒழுங்கமைக்கப்பட்ட வர்க்கமாக ஒன்றிணைக்கக் கூடிய வாய்ப்பினை நல்கும்.

(2) எதேச்சாதிகார முடியரசுகள் வீழுகின்ற அதே நாளிலேயே முதலாளித்துவ வர்க்கத்துக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையிலான போராட்டம் தொடங்கிவிடும் என்பது நிச்சயம். அந்த நாள் முதற்கொண்டு, கம்யூனிஸ்டுகளின் கொள்கையானது, முதலாளித்துவ வர்க்கம் ஏற்கெனவே ஆட்சியிலிருக்கும் நாடுகளில் தற்போது பின்பற்றிவரும் அதே கொள்கையாகவே இருக்கும்.

Loading