இரு நூற்றாண்டு கால றப்பர் தோட்ட தொழிலாளர்களின் சோகக் கதை
1938 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சமசமாஜ’ பத்திரிகை இந்நாட்டு றப்பர் தோட்ட தொழிலாளர்களின் முதலவாது போராட்டத்தை இலங்கை வரலாற்றில் முதலாவது வேலை நிறுத்தப் போராட்டமென செய்தி வெளியிட்டிருந்தது. மேலும் அதே ஆண்டு ஜூலை மாதம் 13ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இவ்வேலை நிறுத்தம் சில நாட்கள் நீடித்த நிலையில் வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும் மேலும் பதிவு செய்துள்ளது. அன்று முதல் 86 வருடங்களாக தமது அடிப்படை உரிமைகளுக்காக போராடி வந்த றப்பர் தோட்ட தொழிலாளர்கள் அன்று சிந்திய கண்ணீருக்கான விலை அன்றைய நாளை விட இன்று அதற்கான பெறுமதி கூடியுள்ளதா.
காலனித்துவ ஆட்சியாளர்களினால் இந்நாட்டிற்கு முதலாவதாக கோப்பி பயிர்ச் செய்கைக்கும் இரண்டாவதாக தேயிலை பயிர்ச்செய்கைக்கும் பின்னர் றப்பர் பயிர்ச்செய்கைக்குமென தென்னிந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட தோட்ட தொழிலாளார்களுக்கு இன்றுடன் இருநூறு வருடங்கள் பூர்த்தியாகின்றன.
அவர்கள் இந்நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட யுகத்திலிருந்து கவனிப்பாரற்றும் காலனித்துவ ஆட்சிக்கு அடிமைப்படுத்தப்பட்டும், பிரஜா உரிமை, அவசரகால சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம் போன்ற சட்ட வரம்புகளினூடாக அவர்கள் அடக்கப்பட்டும், இனவாத வன்முறைச் செயல்கள், அரச பயங்கரவாதம், குடியேற்றங்கள் போன்ற நடவடிக்கைகளினூடாக அவர்கள் மீது பாரபட்சம் காட்டப்பட்டு நீண்டகாலமாக நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டிருந்தனர்.
உழைப்புச் சுரண்டப்பட்டு, தேசிய நெருக்கடிக்கு இரையாக்கப்பட்ட அம்மக்கள் இரு நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக இரத்தம், கண்ணீர் மற்றும் வியர்வை சிந்தி சில சந்தர்ப்பங்களில் உயிர்களை காவு கொடுத்தும் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கி இன்றும் குறைந்தபட்ச வாழ்க்கைத்தரத்திலே வாழ்ந்து வருகின்றனர். ஆனாலும் இலங்கையின் பொருளாதாரத்தினை வளப்படுத்திய அவர்களுக்கு நலன்புரி திட்டங்கள் அமுல்ப்படுத்தப்பட்டிருந்தாலும் அவை அவர்களை சென்றடையவில்லை. இன்றும் அத்தொழிலாளர்களுக்கு உரிமை கொண்டாட ஓர் அங்குலம் நிலம் கூட இல்லை. வாழ்க்கைச் செலவுக்கேற்ற ஊதியம் இல்லை.
றப்பர் பயிர்ச்செய்கை ஆரம்பம்
தென் அமெரிக்காவின் அமேசான் காடுகளில் வளர்ந்த றப்பர் மரங்கள் காரணமாக அதனையொட்டிய உற்பத்திகள் பிரேசிலில் மிகவும் பிரபல்யமடைந்தன. 1876ல் சேர் ஹென்றி விக்கம் (SIR HENRY WICKHAM) ஆசியாவின் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு றப்பர் பயிர்ச்செய்கையை அறிமுகப்படுத்திய முன்னோடியாவார். 1881ஆம் ஆண்டு ஜோர்ஜ் த்வெய்டீஸ் (GORGE THWAITES) தலைமையில் ஹெனரத்கொட (கம்பஹ) என்ற பூங்காவில் இந்நாட்டில் முதலாவது றப்பர் மரக்கன்று நாட்டப்பட்டது. ஆனாலும் அதுவரை காலமும் இந்நாட்டில் செழிப்புற்றிருந்த தேயிலை பயிர்ச்செய்கை காரணமாக றப்பர் உற்பத்தி முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லையாயினும் 20ம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் ஏற்பட்ட மோட்டார் வாகண உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக ஈரவலய பிரந்தியங்களில் றப்பர் பயிர்ச்செய்கை விஸ்தரிக்கப்பட்டது. பின்னர் ஏற்றுமதிப் பணப்பயிர்களில் நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்திய றப்பர் பயிர்செய்கை தேயிலை உற்பத்திக்கு அடுத்தப்படியாக இரண்டாவது ஏற்றுமதிப் பயிராக வளர்ச்சி கண்டது. இதனூடாக 1909 ஆம் ஆண்டில் காலனித்துவ தோட்ட உரிமையாளர்களுடன் இணைந்து களுத்துறையில் றப்பர் ஆராய்ச்சி நிலையத்தை நிறுவினர்.
1956 ஆம் ஆண்டு ஆண்டு கியுபா புரட்சியின் வெற்றியைத் தொடர்ந்து புதிய சோசலிச அரசின் கைத்தொழில் அமைச்சரான அர்னஸ்டோ சேகுவேரா இலங்கைக்கு விஜயம் செய்து களுத்துறை யாஹலதென்ன தோட்டத்தில் றப்பர் கைத்தொழில் தொடர்டபாக ஆய்வு செய்துள்ளமை, அறுபதாம் ஆண்டு காலப்பகுதியில் உருவான சீன-இலங்கை றப்பர்-அரிசி உடன்படிக்கையும் றப்பர் உற்பத்தி எந்தளவு அபிவிருத்தி அடைந்து காணப்பட்டதென்பதற்கு சிறந்த உதாரணங்களாகும்.
சபரகமுவ மாகாணத்தின் கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய இரு மாவட்டங்களிலே அதிகளவில் றப்பர் உற்பத்தி நடைபெறுகின்றது. இரத்தினபுரி மாவட்டத்தில் 435 றப்பர் தோட்டங்கள் காணப்படுகின்றன. அவற்றில் 51 தோட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன. கேகாலையில் காணப்படுகின்ற தோட்டங்களின் எண்ணிக்கை 354. கைவிடப்பட்டுள்ள தோட்டங்கள் 61. களுத்துறை மாவட்டத்தில் 302 தோட்டங்கள் உள்ளன. அவற்றுள் 49 தோட்டங்கள் தற்போது வரை கைவிடப்பட்டுள்ளன. 153 தோட்டங்கள் காலி மாவட்டத்தில் காணப்படுகின்றன. அவற்றில் 21 கைவிடப்பட்டுள்ளவை. மாத்தறை மாவட்டத்தில் 118 தோட்டங்கள் உள்ளன, அதில் 09 தோட்டங்கள் கைவிடப்பட்டுள்ளவை. கொழும்பு மாவட்டத்தில் 103 தோட்டங்கள் காணப்படுகின்றன. அவற்றில் 14 தோட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன. 1,30 000 ஹெக்டெயர் தோட்டங்களில் றப்பர் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கேகாலை மாவட்டத்தில் 49,919 ஹெக்டயருக்கும் அதிகமான நிலப்பரப்பில் றப்பர் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 34 381 ஹெக்டயர் இரத்தினபுரி மாவட்டத்தில், 32,644 ஹெக்டயர் களுத்துறை மாவட்டத்தில், கொழும்பில் 9,954 ஹெக்டயர். இவற்றுக்கு மேலதிகமாக மொனராகலை மாவட்டத்தில் மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளிலும் றப்பர் தோட்டங்கள் அமைந்துள்ளன. அத்துடன் குருணாகல் மாவட்டத்தில் 250ற்கும் ஹெக்டேயருக்கு அதிகமான ஜந்து றப்பர் தோட்டங்கள் இருக்கின்றன.
அகலவத்தை, பலங்கொடை, பொகவன்தலாவ, எல்பிட்டிய, ஹப்புகஸ்தென்ன, நமுனுகுல, ஹொரன, கஹவத்தை, கேகாலை, களனிவெளி, கொட்டகலை, மல்வத்தை, உடபுஸ்ஸலாவை, வட்டவலை, துன்ஹிந்தை, போன்ற பெருந்தோட்ட நிறுவனங்கள் றப்பர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன.
புதிய தொழிலாளர் வர்க்கம்
இலங்கை தோட்ட தொழிலாளர்களின் வரலாற்றில் முதலாவது வேலை நிறுத்தப் போராட்டம் றப்பர் தோட்டத் தொழிலாளாகள் மூலமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. போராட்ட குணங்கொண்ட தொழிற்சங்க தலைவரான எம்.ஜி. மெண்டிஸின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய லயனல் சரத் இவ்வாறு தெரிவிக்கின்றார்: ‘எம்.ஜி. கிரன்திடியில் வசிப்பதற்கு ஆரம்பித்து ஜந்து மாதங்கள் கடந்த நிலையில் அங்கு வெள்ளைக்காரர்களின் தோட்டத்தில் வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனை வழிநடத்தியதும் ஏற்பாடு செய்ததும் எம்.ஜி. 1938 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இவ்வேலை நிறுத்தப் போராட்டம் சில நாட்களிலே வெற்றியுடன் நிறைவு பெற்றதுடன் இலங்கை வரலாற்றின் தோட்டத் தொழிலாளர்களது முதலாவது “ஸட்ரைக்” என ‘சமசமாஜ’ பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
சகோதரர் எம்.ஜியின் அனுசரனையில் அண்ணாசிகல தோட்ட தொழிலாளர்களினால் இலங்கை வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது வேலைநிறுத்தப் போராட்டம். பஸ்துன் கோரளையைச் சேர்ந்த அனைத்து தோட்ட தொழிலாளர்களுக்கும் இவர்களின் ஒன்றினைந்த வெற்றி சிறந்த எடுத்துக்காட்டாகும்.
முன்னொரு காலத்தில் றப்பர் தோட்ட தொழிலாளர்களின் வெற்றி பூமியாக வரலாற்றுத் தடத்தை கொண்டுள்ள களுத்துறை மாவட்டத்தின் இன்றைய நிலைமை முற்றிலும் வேறுபட்டு காணப்படுகின்றது.
“அன்று எமது மக்கள் தமிழ் நாட்டிலிருந்து அழைத்து வரப்பட்டு தோட்ட லயன் காம்பராக்களில் தங்க வைக்கப்பட்டனர். இன்றும் எமது வாழ்க்கையின் நிலைமை அவ்வாறே காணப்படுகின்றது” என களுத்துறை மாவட்ட பதுரெளிய அஸ்க்வெலிய தோட்ட அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் எஸ். பத்மநாதன் தெரிவிக்கின்றார். அவர் மேலும் தெரிவிக்கையில், அன்று காணப்பட்ட நிலைமையை விட இன்று அவர்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
“அன்றைய நாளில் ஒரு மரணம் சம்பவித்தால் சவப் பெட்டிக்கான செலவை தோட்ட நிர்வாகம் வழங்கியது. மயானத்தை அமைத்துக் கொள்வதற்கு சீமெந்து தந்தனர். லயன்களில் வாழ்ந்த மக்களின் துணிகளை துவைப்பதற்கு அதனை எடுத்துச் செல்ல வாரத்தில் ஒரு நாள் டோபி வருவார். முடி வெட்டுவதற்கு பாபர் வருவார். அவர்களுக்கான சம்பளத்தை தோட்டம் வழங்கியது. கோயில் திருவிழாக்களின் செலவை தோட்ட நிர்வாகம் ஏற்றும் கொள்ளும். சம்பளத்தில் அறவிட்டுக்கொள்ளும் வகையில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இன்று எவ்வித சலுகைகளும் இல்லை.” பத்மநாதனின் கூற்றுப்படி மானியங்கள் ரத்துச்செய்யப்பட்டமை அனைத்து தோட்டங்களுக்கும் பொதுவானது. அதிகரித்துச் செல்கின்ற வாழ்க்கைச் செலவுக்கேற்ப வழங்கப்படுகின்ற 900 ரூபா இத்தொழிலாளர்களுக்கு எவ்விதத்திலும் போதுமானதல்ல. தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட ஆயிரம் ரூபா நாட் சம்பளம் இவர்களுக்கு வழங்கப்படவில்லை.
தமது குழந்தைகளுக்கு போசனைமிக்க ஒரு வேலை சாப்பாடு, அவர்களது கல்வித் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கும் கிடைக்கின்ற சம்பளம் போதுமானதல்லவென, புற்று நோய் காரணமாக இருபத்தி நாண்கு வருட பால் வெட்டுத்தொழிலுக்கு விடைகொடுத்துள்ள செல்வி கூறுகின்றார்.
“இப்பொழுது கணவர் மட்டும் தான் வேலைக்குப் போகிறார். ஆனாலும் தோட்டத்தில் தினந்தோறும் வேலை கிடைப்பதில்லை. மழை பெய்கின்ற நாட்களில் எதுவும் இல்லை.” சிந்தாமணி, மாவத்தகமை மொறத்தன்னை தோட்டத்தில் முப்பந்தைந்து வருடங்களாக மிகவும் சுறுசுறுப்புடன் ஒவ்வொரு றப்பர் மரத்தடியிலும் பால் சேகரிக்கும் தேகாரோக்கியமிக்க பெண்ணொருவராவார். இன்றைக்கு இருப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் புவியியல் ரீதியில் குருணாகல் மாவட்டத்தில் தேயிலை பயிர் நிலமாய் காணப்பட்ட மொறத்தன்னை தோட்டம் இன்று பின்தங்கிய தோட்டமாகக் காணப்படுகின்றது. ஏனைய றப்பர் தோட்டங்களைப் போன்று மொறத்தன்னை தோட்டத்திலும் றப்பர் பால் சேகரிப்பதிலும் பால் வெடடுவதிலும் பெண்களே முன்னணி வகிக்கின்றனர்.
“அதிகாலையில் 300 றப்பர் மரங்களில் பால்வெட்டுதல் வேண்டும். ஒரு மணித்தியாலத்தின் பின்னர் பால் சேகரித்தல் வேண்டும். பால் வாளிகளை தூக்கிக்கொண்டு, மேடு பள்ளம் என ஒவ்வவொரு மரத்தடிக்கும் செல்லல் வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் எமதுதொழிலாளர்கள் விழுந்து காயத்திற்குள்ளாகுவார்கள்”. அதுமட்டுமல்ல, அட்டை மற்றும் பாம்பு கடி போன்றவற்றுக்கும் பஞ்சமில்லை. அப்படியிருந்தும் எமக்கு ஒரு நாள் சம்பளமாக ரூபா 900 மட்டுமே வழங்கப்படுகிறது. அது எமது அன்றாட வாழ்ககைக்கே போதுமானதல்ல.
அதிகாலை ஆறு மணியளவில் ஆரம்பமாகின்ற அவர்களது அன்றாட பணிகள் மாலை நாண்கு மணிக்கு நிறைவுறுவதாக இருந்தாலும் றப்பர் பால் சேகரிக்க வருகின்ற பவுசர் தாமதமானால், அவர்கள் மேலும் சில மணித்தியாலங்கள் காத்திருக்க வேண்டும். “அரிசி, சீனி, மாவு போன்ற அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. ஆனால் எமது தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. அரசாங்கம் தலையிட்டு இப்பிரச்சினைகளுக்கு தீர்வொன்றைப் பெற்றுத்தர வேண்டும்.” வாழ்க்கைச் செலவுக்கேற்ற சம்பளத்தை பெற்றுத்தர வேண்டுமென மூன்று குழந்தைகளின் தாயான சிந்தாமணி வலியுறுத்துகின்றார்.
தாய் தந்தை என இருவரும் றப்பர் தோட்டத்தில் பணிபுரிந்தாலும் கிடைக்கின்ற வருமானம் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் பிள்ளைகளின் கல்விச் செலவுகளுக்கும் கூட போதுமானதல்ல. ஆகையால் பலர் தோட்டத்திற்கு வெளியில் கூலி வேலிகளைத் தேடிச் செல்கின்றனர். மொறத்தன்னை தோட்டத்தில் பாடசாலை செல்கின்ற வயதிலுள்ள மூன்று குழந்தைகளின் தந்தையான ரஞ்சனி குமாரும் மிகவும் கடினமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
“2004 ஆம் ஆண்டு முதல் நான் தோட்டத்தில் வேலை செய்கின்றேன். 30 நாட்கள் வேலை செய்தாலும் ஈ.பி.எப், ஈ.டி.எப் மற்றும் யூனியனுக்கான சந்தா அறவிடப்பட்டு இறுதியில் எஞ்சும் சம்பளம் இறுபத்தி நாண்காயிரம் மட்டுமே. அத்தொகை குழந்தைகளின் தேவைகளுக்கே போதுமானதல்ல. ஒரு பிள்ளை உயர்தரத்திலும் மற்றைய பிள்ளை சாதாரண தரத்திலும் கல்வி கற்று வருகின்றனர். மகள் ஆறாம் ஆண்டில் கல்வி கற்கின்றார். கணவர் மேசன் வேலைத் தேடிச் செல்கிறார்.”
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு
றப்பர் உற்பத்தித் தொழிலில் அதிகளவு இரசாயனம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக அமோனியா பயன்பாடு றப்பர் தொழிலில் ஈடுபடுகின்ற தொழிலாளர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியது. தோல் பாதிப்புக்கள், கண், மூக்கு, தொண்டை மற்றும் பார்வையில் பாதிப்பு ஏற்படுதல், கைவிரல் காயங்கள் போன்ற ஆபத்துக்களை அவர்கள் எதிர்கொள்கின்றனர்.
இவ்வாறான பாதிப்புகளுக்கு மேலதிகமாக பாம்பு மற்றும் பூச்சுக் கடிகளுக்கு உள்ளாகின்ற ஆபத்து றப்பர் தோட்டத் தொழிலாளர்கள் முகங்கொடுக்கின்ற பிரதான பிரச்சினையாகும். அதேபோன்று றப்பர் உற்பத்தியின் போது இரசாயன பயன்பாட்டு ஆபத்துக்களைப் போன்று மின்னொழுக்கின் காரணமாகவும் ஆபத்துக்கள் ஏற்படுகின்ற சாத்தியம் அதிகமானதாகும். இவ்வாறு 2018 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மின்னொழுக்கின் காரணமாக காலி போகொட றப்பர் உற்பத்தி தொழிற்சாலையொன்று முழுமையாக எரிந்து நாசமாகியது. இரசாயன கழிவுகள் நீரில் கலப்பதால் புளத்சிங்ஹல பிரதேசத்தில் றப்பர் தொழிற்சாலையொன்று அவ் ஆண்டில் மூடப்பட்டது.
உலக சுகாதார நிறுவனத்தைப் போன்று உலக தொழிலாளர் அமைப்பின் சிபாரிசுகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கமைவாகவே இயங்குவதாக இந்நாட்டில் றப்பர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பிரதான பெருந்தோட்ட நிறுவனங்கள் தமது இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்திருந்தாலும் அவை எவையும் தொழிற்தளங்களில் பின்பற்றப்படுவதில்லை. கைக்கவசங்கள், பாதனிகள், தலைக்கவசம் மற்றும் பாதுகப்பு அங்கிகள் தமக்கு கிடைப்பதில்லையென குருணாகல், களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, காலி போன்ற அனைத்து பிரதேச தோட்ட தொழிலாளர்களும் தெரிவிக்கின்றனர். தொழிற்தளத்தில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டல்கள் பற்றி அவர்களுக்கு எவ்வித விழிப்புணர்வும் இல்லை. அவர்களுக்கு இவ்விடயங்கள் தொடர்பில் தெளிவூட்டுவதில் தொழிற்சங்கங்களும் உதாசீனப் போக்கையே கடைப்பிடிக்கின்றன.
தோட்ட மருத்துவ நிலையங்களின் நிலைமை மிகவும் கவலைக்குரியது. பல தோட்ட நிறுவனங்கள் அவ்வியடம் தொடர்பில் அவதானம் செலுத்துவதேயில்லை.
“தோட்ட மருத்துவ நிலையங்களுக்கு மருத்துவர்கள் இல்லை. உதவியாளர்களும் இல்லை, மருந்துகள் இல்லை மற்றும் ஏனைய உபகரணங்களும் இல்லை. பல மருத்துவ நியைங்கள் மூடப்பட்டுள்ளன. விசேடமாக முதியோர் மற்றும் குழந்தைகளின் சுகாதரம் தொடர்பில் அக்கறை கொள்வதில்லை” என இரத்தினபுரி மாவட்ட பாடசாலையொன்றின் ஆசிரியரொருவரான எம்.சந்திரகுமார் தெரிவிக்கின்றார். அவர் தமிழ் முற்போக்கு கூட்டணியின் மாவட்ட அமைப்பாளராவார்.
தோட்டக்கல்வி
பல தசாப்தங்களாக தமது பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்து தொடர்கின்ற பால் வெட்டுத் தொழிலிருந்து தமது பிள்ளைகளை விடுவித்து சிறந்த சமூக அந்தஸ்த்து மற்றும் வாழ்க்கை முறையைக் பெற்றுக் கொடுப்பதே இங்குள்ள அனைத்துப் பெற்றோர்களினதும் நோக்கமாகவுள்ளது. அவர்களின் கனவை நனவாக்கிக் கொள்வதற்கு இருக்கின்ற ஒரே வழி சிறந்த கல்வியை பெற்றுக் கொடுப்பதாகும். ஆனால் தோட்டப் பாடசாலைகளில் காணப்படுகின்ற குறைபாடுகள் காரணமாக அவர்களது எதிர்கால சந்ததியினரும் லயன் அறைகளுக்குள் முடக்கப்டும் நிலைமை காணப்படுகின்றது. றப்பர் தோட்ட தொழிலாளர்கள் அதிகமாக வாழ்கின்ற இரத்தினபுரி மாவட்ட தமிழ் மொழி கல்வியின் நிலைமை மிகவும் கவலைக்குரியதாகும். நிவித்திகல தொலன்வல தோட்ட குடும்பமொன்றைச் சேர்ந்த அந்தோனி மன்சில்மணி அம்மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களது குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காகச் முன்னின்று செயல்படுகின்ற இளைஞராவார்.
“சாதாரண தரம் வரையிலான வகுப்புகளைக் கொண்ட 40 பாடசாலைகள் காணப்பட்டாலும் கணிதம் விஞ்ஞானம் ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்ப பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. உயர்தரத்தில் ஒருவர் சித்தியடைந்தால் அது கலைப்பிரிவில் மட்டும் தான். இரத்தினபுரியில் உயர்தர வகுப்புக்களைக் கொண்ட 22 தமிழ் மொழி மூல பாடசாலைகள் காணப்படுகின்றன. ஆனாலும் கணித விஞ்ஞான பாடங்கள் இல்லை. கொழும்பு கண்டி பாடசாலைகளில் எமது மாணவர்களை எடுப்பதில்லை.” என மிகவும் கவலையுடன் அவர் தெரிவிக்கின்றார். ஆனாலும் சிவில் சமூக அமைப்புக்களுடன் இணைந்து தோட்ட பாடசாலை மாணவர்களுக்காக மேலதிக வகுப்புக்களை நடத்துவதன் மூலம் மிகச் சிறந்த சேவையை செய்து வருகிறார்.
பலங்கொடை, கஹவத்தை, புஸ்ஸல்ல, அகலவத்தை, துன்ஹிந்தை மற்றும் மதுரட்ட நிறுவனங்களின் கீழ் 20 றப்பர் தோட்டங்கள் நிர்வகிக்கப்படுகின்றன. பல தோட்டங்கள் றப்பர் மற்றும் தேயிலை பயிர்ச்செய்கைகளைக் கொண்டிருந்தாலும் கலவானை பிரதேச செயலகத்தில் மட்டும் பெரும்பான்மையானோர் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களாக இருக்கின்றனர்.
‘தோட்டங்களை அண்மித்து 102 தமிழ் பாடசாலைகள் மாவட்டம் முழுதும் காணப்படுகின்றன. ஆனாலும் அவற்றுக்கு ஆசிரியர்கள் இல்லை, உபகரணங்கள் இல்லை மற்றும் ஏனைய இதர வசதிகள் இல்லை. சாதாரணதரத்திற்கான கணித விஞ்ஞான பாடங்களுக்கான ஆசிரியர்கள் வடகிழக்கு மாவட்டங்களிலிருந்தே வருகை தருகின்றனர். ஆனால் அதிகளவான காலங்கள் அவர்கள் இங்கு இருப்பதில்லை” என தெரிவிக்கும் பாடசாலை ஆசிரியரான சந்திரகுமார், அரசியல் அதிகாரத்தில் தலையீடு செய்வதற்கு தோட்ட தொழிலாளர்களின் பிரநிதித்துவமின்மை பாரிய குறைபாடென கூறுகின்றார். கேகாலை, குருணாகல், கொழும்பு, காலி, மாத்தறை மற்றும் மொனராகலை போன்ற நகரங்களை அண்மித்த றப்பர் தோட்ட பாடசலைகளின் கல்வி நிலைமை மிகவும் கவலைக்கிடமான நிலைமையில் காணப்படுகின்றது. களுத்துறை மாவட்டத்தின் மத்துகம சென் மேரிஸ் பாடசாலையில் தமிழ் மொழி மூல வகுப்புக்கள் நடத்தப்பட்டாலும் தோட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் மீது ஏனைய மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் காட்டப்படுகின்ற பாரபட்ச செயற்பாடுகளினால் அம்மாணவர்கள் கடுமையான மன அழுத்தத்தை உணர்கின்றனர்.
“தோட்டப்புற மாணவர்கள் என்றவுடன் அவர்களை ஆய்வுகூடங்களுக்கு மற்றும் நீச்சல் தடாகங்களுக்கும் அனுமதிப்பதில்லை. இச்செயற்பாடுகளை ஆசிரியர்களும் அதிபர்களும் அனுமதிக்கின்றனர், பழைய மாணவர் சங்கத்தில் இது தொடர்பாக பேசப்பட்டால் எமது பிள்ளைகளை அடிக்க வருகின்றனர்” என அஸ்க்வெலிய தோட்ட அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் பத்மநாதன் தெரிவிக்கின்றார். இப்பிரச்சினைகளுக்கு மாற்று தெரிவாக மத்துகம நகரத்தை அண்டிய பிரதேசத்தில் அரசாங்கத்தின் மூலம் ஜந்து ஏக்கர் நிலமொன்றினை பெற்றுக்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பிரதேசத்தின் பெரும்பான்மையானோர் சிங்கள கல்வி நிர்வாக அதிகாரிளாக இருக்கின்றமையினாலும் அவர்களால் மேற்கொள்ளப்படும் இழுத்தடிப்புக்கள் காரணமாக இதுவரை அம்முயற்சி தாமதமாகிக்கொண்டிருக்கின்றது.
அறுபதாம் ஆண்டு ஆரம்ப காலப்பகுதியில் தமிழ் மொழியில் ‘முப்பனை” என்றழைக்கப்பட்ட மொனராகலை மாவட்டம் பண்டைய மாகம் இராசதானி வேடுவர்களுக்கு சொந்தமான பல இடங்களுக்கும் உரித்துடைய மாவட்டமாகும். மாவட்டம் அமைக்கப்பட்டதன் பின்னர் பெரும்பான்மையானோர் மாத்தறை மாவட்டத்திலிருந்து வந்து குடியேறினர். மொனராகலை, பிபிலை மற்றும் படல்கும்புர ஆகிய மூன்று பிரதேச செயலக பிரிவுகளில் படல்கும்புரையில் மட்டும் தேயிலை பயிர் செய்யப்படுவதுடன் ஏனையவை பெரும்பாலும் றப்பர் தோட்டங்களாகும். மொனராகலை குமாரவத்தைக்கு அருகாமையில் உள்ள அலியாவத்த மற்றும் சிரியாவத்த லயன் அறைகள் மட்டும் அமைந்திருக்கின்ற இடங்களைத் தவிர ஏனைய இடங்கள் அனைத்தும் காடுகளாகியுள்ளன.
தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகளுக்காக தமிழ் மொழி மூல பாடசாலைகள் இருந்தாலும் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக அவர்களின் கல்வி நிலைமை மிகவும் கவலைக்குரிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. பெரும்பாலான பாடசாலைகள் 10 ஆம் ஆண்டுவரை மட்டுமே கற்றல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன. உயர்தர கற்கைகளுக்காக தோட்டத்திலிருந்து கடினமான பாதைகளினூடாக சுமார் ஆறு கிலோமீற்றர்களை கடந்து நகரின் பாடசாலைக்கு வர வேண்டும். ஆகையால் அவர்கள் கல்வியை இடையில் கைவிட்டு விட்டு தோட்டத்தில் பால் வெட்டுவதற்கும் அல்லது வேறு தொழில்களிலும் ஈடுபடுகின்றனர்.
காணி மற்றும் வீட்டு உரிமை
பொதுவாக கடந்த இரு நூற்றாண்டு காலமாக காலனித்துவ ஆட்சியின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட லயன் காம்பரா என்ற 10 அடி சிறிய நிலத்திலே தோட்டத் தொழிலாளர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். தோட்டத்தில் வேலை கிடைத்தாலும் அங்கு சொந்த வீடோ அல்லது ஒர் அங்குல நிலமோ அவர்களுக்கு சொந்தமில்லை. பலர் லயன் அறைகளை தமது சொந்த நிதியில் அவற்றை புனர்நிர்மானம் செய்வதற்கும் மற்றும் லயன் அறைகளை வியாபித்துக் கொள்வதற்கான அனுமதிகள் மிக அரிதாகவே அவர்களுக்கு கிடைக்கின்றன.
“இச் சிறிய லயன் அறைத்தொகுதியிலே தான் ஆண் பெண் என இரு பாலாறும் வாழ்ந்து வருகின்றோம். சமைப்பதற்கு, பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதற்கு, நித்திரை கொள்வதற்கென அனைத்து தேவைகளையும் நாங்கள் பூர்த்தி செய்து கொள்வது இச்சின்னஞ் சிறிய அறையிலே தான்.” தோட்ட நிர்வாகத்திற்கு நாம் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் அதனால் எவ்வித பலனும் இல்லையென பதுரளிய அஸ்க்வெலிய தோட்டத்தில் வசிக்கும் செல்வி கூறுகின்றார். சில தோட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு எவ்வித வீட்டுத்தோட்டங்களையும் செய்வதற்கு அனுமதிப்பதில்லையுடன் ஏதாவதொரு பயிர்செய்கை செய்யப்பட்டிருப்பின் பலவந்தமாய் அவற்றை பிடுங்கி எறிவதில் தயக்கம் காட்டுவதுமில்லை.
மின்சாரம், நீர் மற்றும் கழிப்பறை வசதிகள் மிகவும் குறைந்த மட்டத்திலே லயன் காம்பராக்களில் காணப்படுகின்றது. பாதுகாப்பற்ற மின் வழங்கள் காரணமாக பல சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட மின்னொழுக்கின் காரணமாக லயன் அறைகள் எரிந்து சாம்பலானதில் அவர்கள் சேமித்து வைத்திருந்த அனைத்து பொருட்களையும் இழந்துள்ள தோட்ட தொழிலாளர்களின் துயர் நிறைந்த கதைகள் கடந்த நூற்றாண்டு காலம் முழுவதும் அனைத்து தோட்டங்களிலும் பார்க்கவும் கேட்கவும் முடிகிறது.
சில சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட இயற்கை அழிவுகள் காரணமாக தோட்ட தொழிலாளர்களுக்கு காணி கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமென்கிறார் நிவித்திகல தொலொஸ்வல தோட்டத்தின் மன்சில்மணி. “கடந்த நாட்களில் வீசிய சூறாவளி காரணமாக கிரிபத்கல றப்பர் தோட்டத்தின் லயன் வரிசைக்கருகில் இருந்த அரச மரமொன்று முறிந்து விழுந்ததில் லயன் காம்பராக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டது. இருப்பதற்கு இடமின்றிய ஆறு குடும்பங்களுக்கு 10 பர்ச்சஸ் என்றடிப்படையில் காணித்துண்டுகள் வழங்கப்பட்டன.” ஆனால் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ வீடொன்றை கட்டிக் கொள்வதற்கு அத்தொழிலாளர்களிடம் போதிய பண வசதியின்மை அடுத்த பிரச்சினையாகும். “தொலொஸ்வல தோட்டத்தில் 30 தொழிலாளர் குடும்பங்களுக்கு நாண்கு ஏக்கர் காணி வழங்கப்படடிருந்தாலும் வீடுகள் கட்டிக்கொள்வதற்கு அவர்களிடம் பண வசதிகள் இல்லை” என்கிறார் மன்சில்மணி.
1930ம் ஆண்டு காலப்பகுதியின் பின்னர் தோட்ட தொழிலாளர்களுக்கு புதிய லயன் அறைகள் நிர்மானிக்கப்பட்டிருக்கவில்லை என்பதுடன் தற்போது அதிகரித்துள்ள சனத்தொகையின் காரணமாக வேறு வழியின்றி ஓர் லயன் காம்பராவில் முன்று அல்லது நாண்கு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தோட்ட நிர்வாகத்தின் அனுமதியுடனோ அல்லது அனுமதியின்றியோ விடொன்றை கட்டிக் கொண்டாலும் அதனை அவர்களால் உரிமை கொண்டாட முடியாது. தொழிலாளர்களுக்கு எதிராக சட்டவிரோத குடியிருப்புகள் தொடர்பாக பல வழக்குகள் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
லயன் அறைகளில் வாழ்கின்ற தொழிலாளர்களுக்கு கிடைக்கின்ற கடிதங்கள் தோட்டத்தின் பெயருக்கே வருகின்றன. அவர்களுக்கென்றொரு முகவரி இல்லை. தபாலில் வருகின்ற கடிதங்கள் முறையற்ற விதத்திலே அவர்களது கைகளுக்குச் சென்றடைகின்றது. ஒரே பெயர் கொண்ட பலர் இருக்கும் சந்தர்ப்பத்தில் உரியவருக்கு கடிதம் பல சந்தர்ப்பங்களில் கிடைப்பதில்லை. பல சந்தர்ப்பங்களில் கடிதங்கள் காணாமல் போவதுடன் அதேவேளை மிகவும் தாமதமாக சென்றடைகின்றது. இதன் காரணமாக தொழில் வாய்ப்புக்கள், பரீட்சைகளுக்கு செல்லல் போன்ற விடயங்களை தவறவிடுவதுடன் அடகு வைத்த பொருட்கள் மீட்கமுடியமல் போகின்ற சந்தர்ப்பங்களும் அதிகமாகும். “அதனால் எமது லயன் காம்பராக்களுக்கோ அல்லது இலக்கமொன்றுடன் கூடிய விலாசமொன்று பெற்றுத்தாருங்கள்” என அவர்கள் கேட்கின்றனர். ஆனால் தோட்ட நிறுவனங்கள் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.
பத்தலகொட வெற்றிப்போராட்டம்
காணியுரிமை கோரிய தோட்ட தொழிலாளர்களின் நீண்ட காலப் போராட்டத்திற்கு அண்மையில் குருணாகல் பத்தலகொட றப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. 10 குடும்பங்களை கொண்டுள்ள பத்தலகொட தோட்டம் 281 ஏக்கர் நிலப்பரப்பளவைக் கொண்டுள்ளது. கடந்த மே மாதம் தோட்டத்தின் ஒரு பகுதியை தனியார் துறை முதலீட்டாளரொருவருக்கு விற்பனை செய்வதற்கு உரிமையாளர்கள் தயாரானபோது உடனே சுதாகரித்துக் கொண்ட தொழிலாளர்கள் பலவந்தமாக காணிகளை பிடித்துக் கொண்டனர். அவை கைவிடப்பட்ட றப்பர் தோட்ட காணிகளாகும். தோட்ட உரிமையாளர்கள் பொலிசாரின் உதவியுடன் அவர்களை வெளியேற்ற முயற்சித்த போது பிரதேசத்தின் விவசாயிகள் தொழிலாளர்கள் பிரச்சினைகளில் பங்கெடுக்கும் வரலாற்றில் பெயர் பொறிக்கப்படக் வேண்டிய இப்பாகமுவ தேவசரண உட்பட சிவில் சமூகங்களின் தலையீட்டின் காரணமாக அது தடுக்கப்பட்டது. தோட்டத்தை விற்பனை செய்வதற்கெதிராக வழக்குத் தொடர்வதற்கு முன்வந்த 28 குடும்பங்களுக்கு 10 பர்ச்சஸ் வீதம் காணியை பெற்றுக் கொடுப்பதற்கு இரு தரப்பினரும் இணங்கிக்கொண்ட உடன்படிக்கைக்கமைய தோட்ட உரிமையாளர்கள் காணியை பெற்றுக்கொடுக்க முன்வந்தனர். ஆறு மாதங்களுக்கிடைப்பட்ட காலப்பகுதியில் தற்போது வசிக்கின்ற லயன் காம்பராக்களிலிருந்து தொழிலாளர்கள் வெளியேற வேண்டும் தோட்ட நிர்வாகத்தின் நிபந்தனையாகும். போதுமான பண வசதியின்மையால் அவர்களுக்கு தற்காலிக குடியிருப்பை அமைத்துக் கொள்வதில் பெரும் சவாலை எதிர்கொள்கின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் வரை பத்தலகொட தோட்டத் தெழிலாளர்களின் ஒரு நாள் சம்பளம் 750 ரூபாவாக இருந்தது. தேவசரண நிலையத்தின் தலையீட்டின் பின்னர் அவர்களது சம்பளம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டதுடன் கிரயத்துடன் பெற்றுக்கொடுக்கவும் இணக்கங்காட்டப்பட்டுள்ளது. அதற்கேற்ப ஊழியர் சேமலாப நிதியை முறையாக பெற்றுக்கொள்வதற்கும் அவர்களால் முடிந்துள்ளது.
தோட்டம் மற்றும் கிராமங்களுக்கிடையில் நிலவுகின்ற ஒற்றுமையும் முரண்பாடும்
ஈர வலயத்தை அண்டிய பெரும்பாலான தோட்டங்கள் சிங்கள கிராமங்களுக்கு மத்தியிலே அமைந்துள்ளன. தோட்ட லயன் அறைகளில் வாழ்ந்து கொண்டு தொழிலில் ஈடுபடுகின்ற தமிழ் தொழிலாளர்களுக்கும் வெளியிலிருந்து தோட்டத்திற்கு வேலைக்கு வருகை தரும் சிங்கள தொழிலாளர்களுக்குமிடையில் மிகத்தெளிவான இனப்பரம்பல் காணப்படுகின்றது. ஆகையால் தொழிலாளர்களின் அன்றாட வாழ்விழும் அனைத்து செயற்பாடுகளிலும் கிராமங்களை அண்டிய மக்களின் எண்ணங்கள் மற்றும் செயற்பாடுகள் பெரும் செல்வாக்கை செலுத்துகின்றன. ‘மொறத்தன்னை மற்றும் கோணகல்தெனிய என்ற இரு கிராமங்களின் சிங்கள மக்களும் மொறத்தன்னை தோட்ட மக்களுக்கிடையில் மிக நீண்டகால நட்புறவு காணப்படுகின்றது. கிராமத்தின் அனைத்து கலாசார மற்றும் சமய செயற்பாடுகளின் போதும் அதேபோன்று தோட்டத்தின் அனைத்து செயற்பாடுகளின் போதும் இரு தரப்பினரதும் பங்களிப்பும் ஒத்துழைப்பும் குறைவின்றி கிடைக்கின்றதென” மிகவும் பெருமையுடன் தெரிவிக்கின்றார் மொறத்தன்னை தோட்டத்தைச் சேர்ந்த தொழிற்சங்க செயற்பாட்டாளரான எ.தேவராஜ்.
தெல்ஹேன-ரத்தல்கொட ரம்பொடகல்ல றப்பர் தோட்ட தொழிலாளர்களின் போராட்டம் அண்மைய காலத்தில் தோட்டம் மற்றும் கிராமத்திற்கிடையில் உருவாகியுள்ள நல்லுறவு நல்லிணக்கத்திற்கு சிறந்த உதாரணம். 45 நாட்கள் நடைபெற்ற இப்போராட்டத்தின் வெற்றிக்கு தோட்டத்தை அண்டிய கிராம மக்கள் வழங்கிய பங்களிப்பு என்றும் சிலாகிக்கத்தக்கது. தோட்ட நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட உலர் உணவு நிறுத்தப்பட்ட போது அவர்களின் பசியை போக்கியவர்கள் சுற்றுப்புர கிரமத்தவர்களே. 101 குடும்பங்களைச் சேர்ந்த 544 பேரில் 144 பேர் தோட்டத்தில் பணிபுரிகின்றனர். அதில் 66 பேர் பெண் தொழிலாளர்களாவார்கள். ஜக்கிய ஜனநாயக தோட்ட தொழிலாளர் சங்கம் மற்றும் முற்போக்கு பெண்கள் முன்னணி ஆகிய இரு அமைப்புக்களே இப்போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தன.
ஆனாலும் இந்நிலைமை களுத்துறை, இரத்தினபுரி, மொனராகலை, மாத்தறை மாவட்டங்களில் வேறுபட்டு காணப்படுகின்றது. மத்துகம தோட்ட தொழிலாளர்கள் கடந்த காலம் முதல் இன்றுவரை மிகப் பயங்கரமான அனுபவங்களுக்கு முகங்கொடுத்து வந்துள்ளனர்.
“முன்னர் மத்துகம, அகலவத்தை, களுத்துறை, போன்ற தொகுதிகளில் கொல்வின், சம்லி, அனில் முனசிங்ஹ போன்ற இடதுசாரி தலைவர்கள் இருந்தனர். தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகள் அவர்களுக்கே கிடைத்தன. ஆனால் 1977ம் ஆண்டின் பின்னர் நிலைமை மாற்றமடைந்தது. தற்பொழுது பகிரங்கமாக இனவாதம் பேசப்படுகின்றது. பதுரளிய லத்பந்துர சந்தியில் தமிழில் பாட்டொன்றைக் கூட போடவிடமாட்டார்கள்” என பெயர் குறிப்பிட விரும்பாத தொழிலாளியொருவர் தெரிவித்தார்.
சில காலம் மத்துகமை பிரதேசத்தின் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதியாக இருந்து அண்மையில் காலஞ்சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சரான பாலித்த தொவரப்பெரும மீது தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் சிறந்த நன்மதிப்பினை காணக்கூடியதாயில்லை. அது அவர் தோட்ட தொழிலாளர்கள் மீது பலாத்காரத்தினையும் வன்முறையினையும் பிரயோகித்த காரணத்தினால். இச்செயல்பாடு தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் அவர் மீதான மதிப்பிறக்கத்திற்கு பிரதான காரணியாக அமைந்தது. மொனராகலை றப்பர் தோட்ட தொழிலாளர்களும் தம்மை சுற்றியிருக்கின்ற கிராமங்களை மிகுந்த அச்சத்துடனே கடந்து பெரும்பான்மை தமிழர்கள் வசிக்கின்ற பதுளை மாவட்டத்தின் பஸ்ஸரை மற்றும் லுனுகலை நகரங்களை நோக்கிச் செல்கின்றனர். சிங்கள கிராமங்களை மிக விரைவில் கடந்து சென்றவுடனே அவர்களது மனம் ஆறுதலடைகின்றதென தெரிவிக்கின்றனர்.
தொழிலாளர்களுக்கெதிரான வன்முறைகள்
பொருளாதாரம் மற்றும் தொழில் நிபந்தனைகளுடாகவும் அதேபோல் தேசிய இனநெருக்கடியூடாகவும் தொழிலாளர்களுக்கெதிரான வன்முறைகள் வரலாற்று முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. சுதந்திரத்தின் பின்னர் இந்நிலைமை மோசமாக அதிகரித்ததுடன் தொழிலாளர்களின் உரிமைகளுக்கெதராக சம்பவமொன்று அண்மையில் துன்ஹிந்தை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான தும்பறை தோட்டத்தில் பதிவாகியுள்ளது. “கடந்த மே மாதம் 6ம் திகதி தனது கணவர் வேலைக்கு வரவில்லையென்ற காரணத்தினால் தோட்ட பொது முகாமையாளர், கள உத்தியோகத்தர் மற்றும் காவற்காரர் இணைந்து பெண் தொழிலாளரொருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதல் காரணமாக அவர் மூன்று நாட்கள் ஹொரனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். கிரிஎல்ல பொலிசில் முறைப்பாடு செய்தும் நாண்கு நாட்கள் வரை குற்றவாளிகளை கைது செய்யாமல் பல பொய்களை கூறிக்கொண்டு பொலிசார் சட்ட நடவடிக்கைகளை தட்டிக்கழித்தனர். ஆனாலும் சிவில் சமூகம், அரசியல் மற்றும் கிராமவாசிகளின் அழுத்தம் காரணமாக குற்றவாளிகள் பொலிசில் சரணடைந்தனர். நீதிமன்றில் ஆஜர்படுத்தியப் பின்னர் பொலிஸ் பிணை வழங்கலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத காரணத்தினால் விடுதலை செய்யப்பட்டனர்” எனவும் அதேவேளை அவர்களுக்கெதிராக தொடுக்கப்பட்ட வழக்கு தொடர்ந்து கொண்டு நடத்தப்படுமெனவும் அரசியல் செயற்பாட்டாளர் சந்திரகுமார் தெரிவிக்கின்றார். இதற்கு சமமான சம்பவமொன்று தும்பர தோட்டத்திற்கு அண்மையிலுள்ள தெலதுர தோட்டத்திலும் இடம்பெற்றுள்ளது.
தனது மனைவி தோட்டத்தில் பால் வெட்ட வராத காரணத்தினால் அவரது கணவர் மீது தெலதுர தோட்ட காவற்காரர் தனது இரு ரவுடிகளுடன் இணைந்து அவர் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். சந்திரகுமார் போன்றோர் காட்டிய எதர்ப்பின் காரணமாக அவர்களுக்கு பிணை மறுக்கப்பட்டு இரு வாரங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
“காவற்காரர் உட்பட அவரது ரவுடிகள் என் கணவரின் தலை நொறுங்கும் வகையில் பியர் போத்தலில் தாக்கியுள்ளனர். ஐந்து நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மூன்று நாட்களாக பொலிஸ் எதுவும் செய்யவில்லை. பின்னர் குற்றவாளிகள் மூன்று பேரையும் பிடித்து நீதிமன்றில் ஒப்படைத்தனர். தும்பறையில் போல் அவர்களால் இங்கு பிணை எடுக்க முடியவில்லை. நாம் சட்டத்தரணியூடாக விடயங்களை தெளிவுபடுத்தி பிணை கொடுப்பதை எதிர்த்தோம்.”
தோட்ட நிர்வாகத்தினரின் இவ்வாறான சண்டித்தனங்களுக்கு தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக முகம்கொடுக்க வேண்டியுள்ளது. அதேபோல் 1977, 1981 மற்றும் 1983 காலப்பகுதியில் அரச அனுசரணையில் நிகழ்த்தப்பட்ட தமிழர்களுக்கெதிரான வன்முறைகளில் பெரும்பாலும் தோட்ட தொழிலாளர்களே பாதிக்கப்பட்டனர்.
இரத்தினபுரி, கிரிஎல்ல, நேபட, மத்துகம, காலி, குருணாகல், கேகாலை போன்ற தோட்டங்களில் லயன் அறைகளை தீ வைத்தல், கோவில் மற்றும் தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள், கொள்ளையடித்தல், பெண்களுக்கெதிரான பாலியல் பலாத்காரங்கள், காயப்படுத்தல் மற்றும் கொலை செய்தல் போன்ற பல்வேறு தகவல்களை அறிந்து கொள்வதற்கு பின்னர் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவினால் அமைக்கப்ப்பட்ட சன்சொனி ஆனைக்குழுவினால் கண்டறிய முடிந்தது. அவ் அறிக்கைக்கேற்ப 1977 ஆகஸ்ட் வன்முறைச் சம்பவங்களினால் 500க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பி.பெருமாள் கேகாலை, பின்தெனிய தோட்டத்தில் றப்பர் பால் வெட்டும் தொழிலாளியாவார். தான் சந்தித்த துயரங்களை சன்சொனி ஆணைக்குழு முன் இப்படி தெரிவிக்கின்றார்: “ஆகஸ்ட் 19ம் திகதி குழுவொன்று வந்து லயமொன்றை தாக்கி விட்டுச் சென்றனர். மறுநாள் இன்னுமொரு கூட்டம் வந்து தாக்கியது. 41 லயன் அறைகளைக் கொண்ட நாண்கு லயன் வரிசைகள் இத்தாக்குதல்களுக்கு இலக்காகின. அவற்றை கொள்ளையடித்தனர். குடும்பத்திலுள்ளவர்களை தாக்கினர்.”
நெலும்தெனிய, கஸ்நாவ தோட்டத்தில் வசித்த பெண் தொழிலாளியான செல்வரானி என்ற பெண் கிராமத்தவர்களினால் கூட்டாக பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக சன்சொனி ஆணைக்குழு முன் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 19ம் திகதி தாக்குதல் நடத்தப்படக் கூடுமென்றும் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுமாறும் தோட்ட முகாமையாளரால் தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தனது தாயுடன் தோட்டத்தின் எல்லையில் அமைந்திருந்த குணபாலவின் வீட்டுக்குச் சென்றிருந்தார். அன்றிரவு குணபாலவின் வீட்டை நோக்கி வந்த காடையர் கூட்டம் செல்வராணியையும் அவரது தாயாரையும் தாக்கி பின்னர் செல்வராணியை குணபாலவின் வீட்டின் பிற்புறத்திற்குச் தூக்கிச் சென்று ஆறு பேர் கொண்ட நபர்களினால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுள்ளார். மறுதினம் அவரது லயன் காம்பரா வீட்டிற்கு சென்று பார்த்த போது அவ்வீடு கொள்ளையடிக்கபட்டிருந்ததுடன் ஆகஸ்ட் 22ம் திகதி தெதிகம பொலிசில் முறைப்பாடு செய்ததுடன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் சுனில், திலகரத்ன, ஆரியவங்ஸ, திலகே மற்றும் குலசிரி என்போர் என அடையாளங்கண்டு கொண்டதாகவும் முறைப்பாடு செய்துள்ளார். செல்வராணியால் பெயர் குறிப்பிடப்பட்ட அனைவரும் இருபத்தி நாண்கு வயதையுடைய கஸ்நாவ தோட்டத்தை அண்மித்து வாழ்ந்தவர்களாவார்கள்.
ஆகஸ்ட் 23ம் திகதி லயன் காம்பராக்கள் மீது காடையர் கூட்டம் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக அச்சங்கொண்ட தொழிலாளர்கள் வெளியேறிச் சென்றதுடன், தாக்குதலுக்கிலக்காகி காயமடைந்த அவரது மாமானாரான குருசாமி மறுநாள் மரணமடைந்தாக மத்துகம சென் ஜோர்ஜ் தோட்டத் தொழிலாளியான கே.ஏகாம்பரம் தெரிவிக்கின்றார். தன் மாமனார் இறப்பதற்கு முன்பும் இறந்த பின்னரும் பொலிசிற்கு அறிவித்தாலும் அவற்றை பொருட்படுத்தாத அவர்கள் “யாழ்ப்பாணத்தில் எமது பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்படும் பொழுது, ஏன் உங்களுடைய ஆட்களை கொல்வதில் என்ன தவறு” என தெரிவித்ததாக ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கையில் ஏகாம்பரம் தொவித்துள்ளார். ஆகையால் எவ்வித மரண விசாரணையுமின்றி தமது மாமனாரை அடக்கஞ் செய்ய நேரிட்டுள்ளது அவருக்கு! அதேவேளை அண்மித்த லயன் காம்பராவில் வாழ்ந்த வேலு என்ற தொழிலாளி துப்பாக்கியால் சுடப்பட்டு ஏற்பட்ட காயத்தால் நாண்கு நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
1981ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தமிழர் விரோத வன்முறைச் சம்பவத்தினால் விசேடமாக சபரகமுவ மாகாணத்தின் தோட்ட தொழிலாளர்கள் பாதிப்படைந்தனர். அப்போது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்திற்கெதிராக அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரனையுடன் தாக்குதல் ஆரம்பித்தது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டிகளில் ஏறிய ஆயுததாரிகள் கஹவத்தை, றக்வானை, நிவித்திகல, பெல்மடுல்லை, பலாங்கொடை தோட்டங்களுக்குள் நுழைந்து வழமைப்போல் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து அவற்றை எரித்து, கொள்ளையடித்து. பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள், மனிதக் கொலைகள் என அக்கிரமம் செய்தனர். 43 றப்பர் மற்றும் தேயிலை தோட்டங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் 15000 தொழிலாளர்கள் இடம்பெயர்ந்தனர்.
1981 ஆகஸ்ட் 29 ஆம் திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபையினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமது சிறு குழந்தைகளை சுமந்தபடி ஆண்கள் பெண்கள் என அனைவரும் தமது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக றப்பர் தோட்டங்களுக்கு நடுவில் பாதுகாப்பான இடங்களை நோக்கி தப்பிச் சென்றதுடன் அவர்கள் கடினமான காடுகளுக்கு மத்தியில் பலங்கொடையிலிருந்து பொகவந்தலாவை வரைக்கும் மிகச்சிரமத்துடன் நீண்ட தூரம் நடந்து வந்துள்ளரென குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்டனி மசில்மணி தனது எட்டு வயதில் தான் முகங்கொடுக்க நேர்ந்த வன்முறைச் சம்பவமொன்றிலிருந்து மயிரிழையில் உயிர் பிழைத்த ஒருவராவார். அப்பயங்கர அனுபவத்தை முதற்தடைவையாக ஊடகத்துடன் பகிர்ந்து கொள்கிறார்.
“1981ஆம் ஆண்டு ஜூலை மாதம் கஹவத்தை புனித அன்னம்மாள் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சுற்றத்திலுள்ள தோட்டங்களிலிருந்து 30 சிறுவர்கள் நற்கருணைக்காக வருகை தந்திருந்தனர். கஹவத்தையிலிருந்து வருகை தந்த காடையர் கூட்டமொன்று தேவாலயத்திலிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். சிறுவர்களாகிய நாங்கள் 30 பேரும் ஆலயத்தின் திருப்பீடத்திற்கு பின்னாலிருந்த அறையொன்றில் உறைந்துப் போய் அக்காட்டுமிராண்டிகள் செல்லும் வரை ஒளிந்திருந்தோம்.
அக்காடையர்கள் தங்கள் வெறித்தனத்தை நிறைவு செய்கையில் ஆலயத்தின் வழிபாட்டு உதவிகளில் ஈடுபட்டிருந்த சிறு பிள்ளையொருவரும் மேலும் ஏழு பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தனர். ஆலயத்தின் தோட்டவளவின் ஒவ்வொரு இடங்களிலும் கிடந்த சடலங்களைப் பார்த்த அதர்ச்சியிலிருந்து இன்றும் அவர்கள் மீள முடியாதவர்களாகவே இருக்கின்றனர்.
“பெரும்பாலும் 77ல் தோட்ட மக்கள் தாக்கப்பட்டனர். 81 மற்றும் 83 ஆம் ஆண்டு வன்முறைகளில் நகரங்களிலில் வாழ்ந்த தமிழர்களே அதிகம் தாக்கபட்டிருந்தனர் என கேகாலை அட்டால தோட்டத்திலுள்ள மனித உரிமைகளுக்கான இல்லம் (Home for Human Rights) அமைப்பின் செயற்பாட்டாளரான மேகலா சன்முகம் இவ்வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட எந்தவொரு நபருக்கும் நீதி கிடைக்கவில்லையென்கிறார்.
“பின்கந்தை தோட்டத்தில் றப்பர் பால் வெட்டும் தொழிலாளர்களே வாழ்கின்றனர். அத்தோட்டம் 77,81 மற்றும் 83 வன்செயல்களினால் தாக்கப்பட்டிருக்கின்றது. எனது அப்பா தோட்டத்தின் கள உத்தியோகத்தர். 77 ஆம் ஆண்டு காடையர்கள் எமது வீட்டின் மீது தாக்குதல் நடத்தியபோது நாங்கள் காட்டுக்குள் ஓடி உயிர் பிழைத்தோம். தோட்டத்தில் வசித்த சோமபால என்ற டிரக்டர் டிரைவர் உட்பட பலர் இணைந்து தோட்டத்தின் பெண் பிள்ளையொருவரை கூட்டாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியிருந்தனர். இவ் அக்கிரமத்தை அனைவரும் அறிந்திருந்தாலும் முறைப்பாடு செய்வதற்கு அச்சங் கொண்டிருந்தனர். பொலிசும் குற்றவாளிகளை பாதுகாத்தன. அன்றைய நாட்களில் இதுபோன்ற பல சம்பவங்களை கேள்விப்பட்டோம். பாதுகாப்பு தருகிறோம் என்ற போர்வையில் மிகவும் திட்டமிட்டு இவ்வல்லுறவு சம்பவம் இட்ம்பெற்றது.” காலத்தால் இவ் அக்கிரமங்கள் மறைக்கப்பட்டாலும் இப்படுபாதகச் செயல்களை இன்றும் மறக்க முடியாதுள்ளதாக வருந்துகிறார் மேகலா.
கேகாலை மாவட்டத்தில் இன்றும் இனவாத போக்குகள் குறையாதுள்ளதாக தெரிவிக்கும் மேகலா. “இன்றும் கூட தோட்டத்தின் இளைஞரொருவருக்கு முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் சவாரிக்கு இடங்கொடுப்பதில்லை. எப்படியாவது இடத்தைப் பெற்றுக் கொண்டால் ஹயர் கிடைக்கச் செய்ய விடமாட்டார்கள்.”
“முதலாவதாக தோட்ட மக்களுக்கும் கிராம மக்களுக்குமிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.”
பிரஜா உரிமை சட்டத்தினூடாக நாடு கடத்தல்
1947ஆம் ஆண்டு அரசுப் பேரவை தேர்தலில் மலையக தோட்ட தொழிலாளர்களின் பிரதிநிதிகள் பலர் தென் பிரதேச இடதுசாரிகள். அவர்கள் தோட்ட தொழிலாளர்களின் வாக்குகளினால் அரச சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவ்விடயத்தில் கவனஞ் செலுத்திய முதலாளித்துவ தலைவர்கள் தோட்டத் தொழிலாளர்களின் பலத்தை குறைப்பதற்காக 1948 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க பிரஜா உரிமை சட்டத்தை அறிமுகப்படுத்தினர். பிரஜா உரிமையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு தந்தை அல்லது பொறுப்பாளர் இலங்கையில் பிறந்தவராக இருத்தல் வேண்டுமென்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது. அந்நிபந்தனைகளை மேலும் பலப்படுத்திக் கொண்டு 1949ஆம் ஆண்டு 3 ஆம் இலக்க பிரஜா உரிமை சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
இச்சட்ட மூலம் காரணமாக இந்திய மற்றும் பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் உட்பட ஏனைய பல பேருக்கு, பிரஜா உரிமைத்துவம் வாக்குரிமை உட்பட ஏனைய சட்ட பூர்வ தன்மைகள் இழக்கபட்டமை பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தியது. இப்பிரச்சினையை சுமூகமாக தீர்த்துக்கொள்ளும் நோக்கில் இலங்கை பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல மற்றும் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆகியோருக்கிடையில் 1954ல் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டது.
இவ்வுடன்படிக்கையினூடாக பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாத காரணத்தினால் அதற்கு 10 வருடங்களுக்குப் பின்னர் 1964ல் ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு பிரஜா உரிமை நீக்கம் செய்யப்பட்டு 9,75,000 தோட்டத்தொழிலாளர்கள் இருநாடுகளுக்கிடையில் பிரித்துக் கொள்ளப்பட்டனர். இந்தியா 5,25,000 தொழிலாளர்களை மீளப்பெற்றுக்கொண்டது. இலங்கை மூன்று லட்சம் பேரை பொறுப்பேற்றுக்கொண்டது. எஞ்சியிருந்த 1,50,000 தொழிலாளர்களை அதற்கு பத்து வருடங்களின் பின்னர் 1974ல் ஏற்படுத்தப்பட்ட ஸ்ரீமா-இந்திரா ஒப்பந்தத்தினூடாக 75,000 என்றடிப்படையில் தோட்டத்தொழிலாளர்களை இரு நாடுகளும் பிரித்துக் கொண்டன” என மலையகத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் அமைப்பின் ஏற்பாட்டாளர் எம்.கந்தையா தெரிவிக்கின்றார். அரசியல் மற்றும் தொழிற்சங்க செயற்பாட்டாளரான இவர் 1983ஆம் கறுப்பு ஜீலையின் பின்னர் இந்தியாவுக்கு புலம்பெயர்ந்தவர்.
“இந்தியாவுக்கு வருகை தந்த அனைவருக்கும் றப்பர் மற்றும் தேயிலை தோட்டங்களில் வேலைகள் கிடைத்தன. கன்னியாகுமரி மாவட்டத்தின் கர்நாடகா, கேரள மற்றும் ஆந்திரா பிரதேச றப்பர் தோட்டங்களில் சுமார் 4000 குடும்பங்கள் பனிபுரிந்து வருகின்றனர்.” பிரஜா உரிமைகளுடன் தொடர்புடைய மற்றும் முன்னர் குறிப்பிடப்பட்ட உடன்படிக்கைகளுக்கமைய வெளியேற்றப்பட்ட தோட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 4,61,000 ஆகும். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா பிரதேசம், கேரளா மற்றும் அந்தமான் தீவுகள் தற்போது இவர்களுடைய நிரந்தர வாழ்விடங்களாகி விட்டன.
இன்றும் நண்பர்கள் மற்றும் உறவினர்களை வருடத்திற்கொருமுறை வந்து பார்த்து விட்டுச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிக்கின்றனர்.
கந்தையா கூறுவது போல் 1977,1981 மற்றும் 1983 வன்செயல்களிலிருந்து உயிர்பிழைத்துக் கொள்வதற்காக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு தப்பிச்சென்றவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்திற்கும் அதிகமாகும்.
பெருந்தோட்டங்களை மக்கள் மயப்படுத்தல் மற்றும் தனியார் மயமாக்கலுக்கான அழுத்தம்
1970ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினால் அதுவரை பிரித்தானியர்களிடமிருந்த முன்னணி தேயிலை, றப்பர் மற்றும் தென்னந்தோட்டங்கள் மக்கள் மயப்படுத்தலின் கீழ் அரசுடைமையாக்கப்பட்டது. ஜனவசம, அரச பெருந்தோட்ட தினைக்களங்கள் மற்றும் உசவசம போன்ற அரச நிறுவனங்களை அமைத்து அதனூடாக தோட்டங்கள் நிர்வகிக்கப்பட்டன. அரசுக்கு நெருக்கமானவர்களைக் கொண்டிருந்த இந்நிறுவனங்களினூடாக மக்கள் மயப்படுத்தல் காரணமாக தோட்டத் தொழிலாளர்களுக்கு நன்மை விளைந்தது. தேயிலை, றப்பர், தென்னந் தோட்ட தொழிலாளர்கள் நாட்சம்பளத்திற்கு பதிலாக தொழிலாளர்கள் கூட்டாக மாதச் சம்பளத்தை வழங்குமாறு கோரியிருந்தனர். ஆனால் தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்க தலைவரும், இடதுசாரி முன்னணி தலைவர்களிரொருவரான ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் பெருந்தோட்ட துறை அமைச்சரான கொல்வின் ஆர் டி சில்வாவினால் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. உலகில் எந்தவொரு நாட்டிலும் தோட்ட தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் வழங்கப்படுவதில்லையென தெரிவித்துள்ளாரென தான் எழுதிய தோட்ட மக்களின் வரலாறு என்ற நூலில் கம்யூனிஸ தொழிறசங்க தலைவரான எஸ்.நடேசன் தெரிவித்துள்ளார். தோட்டங்கள் மக்கள் மயப்படுத்தல் காரணமாக அதுவரை லயன் காம்பராக்களுக்கும் தோட்டங்களுக்கும் கம்யூனிஸ தலைவர்களுக்கு உள் நுழைவதற்கு அதுவரை காலம் இருந்த சில தடைகள் நீக்கப்பட்டிருந்தாலும் வீடு மற்றும் காணி தொடர்பான பிரச்சினைகள் தொடர்ச்சியாக இருந்து கொண்டேயிருந்தன. அதுவரை காலம் நிறுவனங்களிற்கு கீழ் இருந்த 300 தோட்ட பாடசாலைகள் இலவசக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு தசாப்த காலத்தின் பின்னரே கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டன.
அப்போதிருந்த பலம்பொருந்திய தொழிற்சங்கமும் அரசியல் முன்னோடியுமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஒத்துழைப்புடன் அரசுப் பேரவை ஆட்சியின் கீழ் நிர்வகிக்கப்பட்ட தோட்ட நிர்வாகங்களின் திறனற்ற நிர்வாகம் காரணமாக தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாகவும் அதனால் 1992 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி தோட்டங்களை தனியார் மயப்படுத்தியது. 1992 ஆம் ஆண்டு மத்திய வங்கி அறிக்கையின் படி அரசாங்கத்தின் தனியார் மயப்படுத்தல் திட்டத்தின் கீழ் பெருந்தோட்ட அபிவிருத்தி சங்கத்தினாலும் மற்றும் அரச பெருந்தோட்ட தினைக்களத்தினாலும் நிர்வகிக்கப்ட்ட 449 தோட்டங்கள் தனியாருக்கு வழங்கப்பட்டன. அவற்றில் 131 றப்பர் தோட்டங்கள் அரசின் கீழ் இருந்தவையே.
தனியார் மயப்படுத்தலின் போது அதிகரிக்கின்ற வாழ்க்கைச் செலவிற்கேற்ப நாளொன்றுக்கு 20 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டுமென நிறுவனங்களுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால் அந்நிபந்தனைகளை பின்பற்றுவதில் தோட்ட நிறுவனங்கள் அக்கறை கொண்டிருக்கவில்லை. அதேபோல் அதுவரை காலம் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியங்களை ரத்துச்செய்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சியை தொடர்ந்து தொழிலாளர்களுக்கிடையில் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்தன.
1994 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் தனியார் மயமாக்கல் திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்தியதுடன் தோட்டத் தொழிலாளர்களுக்கும் முதலாளிமார்களுக்கிடையில் நிலவுகின்ற பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு முற்தரப்பு உடன்படிக்கையொன்றை அறிமுகம் செய்தனர். இரு வருடங்களுக்கொருமுறை தொழிலாளர்கள் சார்பில் தொழிற்சங்க பிரதிநிதிகள், தோட்ட நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தின் சார்பில் தொழில் ஆணையாளரும் இணைந்து உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதுடன் அங்கு தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் தொடர்பாக இரு தரப்பும் இணைந்து கலந்துரையாடி உடன்பாட்டுக்கு வந்தனர். அதனூடாக ஓரளவு நிவாரணத்தை பெற்றுக்கொண்டாலும் தற்போது வரையில் தோட்டத் தொழிலாளர்களை பாரிய நெருக்கடிக்குள்ளாக்கிய அக்கூட்டு உடன்படிக்கை வீழ்ச்சி கண்டுள்ளது. தற்போது அரசாங்கத்தினாலும் கட்டுப்படுத்த முடியாத தோட்டங்கள் தன்னிச்சையாக செயற்படுகின்றன.
றப்பர் தோட்ட தொழிலாளர்களின் நாளைய எதிர்காலம்
தொழிலாளர்களின் நாட் சம்பளத்தை ரூபா 1700 ஆக அதிகரிப்பதற்கு அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட முடிவினை தோட்ட நிர்வாகங்களினால் நிராகரிக்கப்பட்டமையினால் பாரிய நெருக்கடி உருவாகியுள்ளது. றப்பர் உற்பத்தியின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளமையினால் 1700 ரூபா சம்பள அதிகரிப்பினை வழங்க முடியாதென நிறுவனங்கள் தெரிவித்திருந்தாலும் நிதி மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்கள் அமைச்சு கடந்த சில வருடங்களில் றப்பர் உற்பத்தி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றது.
2021 ஆண்டுக்கு சமாந்தரமாக றப்பர் உற்பத்திக்கு ஈடான ஏனைய பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 2022 ஆம் ஆண்டில் 39 சதவிகிதத்தால் அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். 2021ஆம் ஆண்டில் 1050 மில்லியன் அமெரிக்க டொலர் வருமாணத்தை ஈட்டித்தந்த றப்பர் உற்பத்திகள் 2022 ஆம் ஆண்டு 1463 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. எதர்வரும் வருடங்களை இலக்காகக் கொண்டு றப்பர் தொழிற்துறையை கருத்திற்கொண்டு வெளியிடப்பட்ட பாரிய (Master Plan 2017-2026) திட்டத்திற்கமைவாக 2026 ஆம் ஆண்டு மூன்று பில்லியன் அமெரிக்க டொலர் வருமாணத்தை றப்பர் உற்பத்தியின் மூலம் பெற்றுக்கொள்வதே நோக்கமென்கிறார் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன. எவ்வாறிருப்பினும் அதிகரித்துச் செல்கின்ற வாழ்கைச் செலவு ஏற்ப தொழிலாளர்கள் எதிர்ப்பார்க்கின்ற சம்பள உயர்வுக்கு நீதியை பெற்றுக்கொடுக்காமல் இவ் இலக்கை எட்ட முடியுமா என்பது சவாலுக்குரிய விடயமாகும்.
“இன்று தோட்டத்தில் எடை குறைந்த குழந்தைகள் பிறக்கின்றனர். காரணம் போசனைமிக்க உணவை பெற்றுக் கொடுப்பதற்கு தோட்டத் தொழிலாளர்களின் பெற்றோர்களுக்கு போதிய வருமாணம் இல்லை என சம்பள அதிகரிப்பினை போன்று குறைந்த விலையில் அத்தியவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு கூட்டுறவுச் சங்க முறைமையினை மீண்டும் தோட்டங்கள் செயல்படுத்த வேண்டுமென மாவத்தகமை மொறத்தன்னை தோட்டத்தின் தொழிற்சங்க செயற்பாட்டாளர் எ.தேவராஜ் தெரிவிக்கின்றார்.
குறைந்தளவு சம்பளம், மானியங்களை ரத்துச்செய்தல் தொழில் பற்றிய நம்பிக்கையின்மை போன்ற பல காரணிகளை மையமாகக் கொண்டு இன்று பல தொழிலாளர்கள் தோட்டங்களிருந்து வெளியேருவதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.
“பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை தேடிச் செல்ல ஆரம்பித்துள்ளனர். எப்படியாவது இளைஞர்கள் தோட்டங்களுக்கு வெளியே ஏதாவதொரு தொழிலை தேடிக் கொள்வதற்கு முயற்சிக்கின்றனர். பெரும்பாலும் கடைகளில், சுப்பர் மார்கட்களில் பல சந்தர்ப்பங்களில் வீடுகளில் மற்றும் ஆடைத்தொழிற்சாலைகளில் தோட்டங்கிளிலிருந்து சென்ற யுவதிகளே பணிபுரிகின்றார்களென மொறத்தன்னை தோட்டத்தில் பால் வெட்டும் தொழிலாளி வேலு ஜீவரத்தினம் தெரிவிக்கின்றார். தனது மனைவியும் பணிப்பெண்ணாக மத்திய கிழக்கு நாடொன்றுக்கு தொழிலுக்கு சென்றுள்ளதுடன் ஜீவரத்தினம் தனது குழந்தைகளை பராமரித்துக் கொண்டு தோட்டத்தில் பணிபுரிந்து வருகின்றார்.”
ஈரவலய பிரதேசத்தில் அதிகமான றப்பர் தோட்டங்கள் வேறு திட்டங்களுக்காக பயன்படுத்திக் கொள்வதற்காக அழித்தல், நிறுவனங்கள் றப்பர் மரங்களில் லாபத்தினை பெற்றுக்கொள்ளாது புதிய றப்பர் பயிர்ச்செய்கையின் மீது ஆர்வம் கொள்ளாத காரணத்தால் நிறுவனங்கள் றப்பர் மரங்களை பிடுங்கி அவற்றில் கட்டுபொல், டிராகன் பழம், வெனிலா போன்ற வேறு பொருளாதார பயிர்சசெய்கைகளுக்கு மாறிய காரணத்தினால் றப்பர் பயிர்ச்செய்கைக்கான பூமி பிரதேசம் சுருங்க ஆரம்பித்துள்ளமை பாரிய பிரச்சினையாகும். றப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கைக்கேற்ப 2014 ஆம் ஆண்டளவில் பாரியளவில் றப்பர் உற்பத்தி செய்யப்படும் மாவட்டங்களாக கருதப்படுகின்ற கேகாலை ஹெக்டயர் 34,453ஆகவும், களுத்துறை ஹெக்டயர் 24,195ஆகவும், இரத்தினபுரி 22,065 ஹெக்டயர் நிலப்பரப்புகளில் றப்பர் பயிர்ச்செய்யப்பட்டாலும் அதனை கடந்த வருடத்துடன் ஒப்பிடுமிடத்து கேகாலை ஹெக்டயர் 15,466 ஆகவும், இரத்தினபுரி ஹெக்டயார் 12,316ஆகவும் களுத்துறை ஹெக்டயர் 8,449 ஆகவும் விழ்ச்சி கண்டுள்ளது.
1989 ஆம் ஆண்டு ஜனாதிபதி பிரேமதாச ரணசிங்ஹ ஆட்சியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட கம்உதாவ திட்டம் புத்தள பிரதேசத்தின் றப்பர் தோட்டங்களை அழித்தே செயல்படுத்தப்பட்டது. அதேபோல் ஹொரனை பிரதேசத்தில் பாரிய றப்பர் தோட்டங்கள் தொழிற்பேட்டைக்காக பலி கொடுக்கப்பட்டுள்ளதுடன் கைவிடப்பட்டுள்ள தோட்டங்களை தோட்ட தொழிலாளர்களுக்கு பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதற்கும் வளர்ப்பு பிரானிகளை மேய்ப்பதற்கும் இத்தோட்டங்களை பெற்றுக் கொடுக்குமாறு பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
வறுமையின் அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்ற இவர்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்குகின்ற றப்பர் தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவுக்கேற்ற ஊதியம், காணி மற்றும் வீட்டுரிமை, கல்வி, சுகாதாரம் நீர் மற்றும் போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகளைப் போன்று இவர்களை மரியாதைக்குரிய பிரஜைகளாக கருதுவது, சகோதரத்துவம் மற்றும் ஒத்துழைப்பினூடாக அவர்களது வாழ்க்கையை குறிப்பிடத்தக்க நிலைக்கு உயர்த்தும்.
தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டிக்கொண்டு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மானியங்களை ரத்துச்செய்துக் கொண்டு தொடர்ந்து பயனிப்பதாயின் றப்பர் தொழிற்துறை எதிர்ப்பார்க்கின்ற இலக்கை மற்றும் வெற்றியை நோக்கி நகர முடியாது. அவ்வாறாயின் அவ் அழுத்தங்களுக்கெதிராக தொழிலாளர்கள் மத்தியில் போராட்டங்கள் எழுச்சி கொள்ளும்.
இசங்கா சிங்ஹ ஆரச்சி
ishanka.singhe@gmail.com
(இக்கட்டுரை “இன்டர்நியுஸ் இலங்கை” அனுசரனையில் எழுதப்பட்டுள்ளது)
தமிழில்: சுப்ரமணியம் நயன கணேசன்