By Sevvilam Parithi
‘பிரிட்டன் எப்படி பிரிட்டிஷ்காரனுக்குச் சொந்தமோ-
பிரான்ஸ் எப்படி பிரெஞ்சுக்காரனுக்கு சொந்தமோ –
அதுபோல –
பாலஸ்தீனம் அரேபியர்களுக்குச் சொந்தமானது!’
என்று எழுதினார் மகாத்மா காந்தி.
அமெரிக்கா பிரிட்டனின் உதவியுடன்
பாலஸ்தீனத்தின் மீது தங்களைத் திணிக்க
முயற்சிக்கும் யூதர்களின் முயற்சி
தவறானது என்றார் நேரு.
சுதந்திர இந்தியாவின் பிரதமர் நேரு
தலைமையிலான முதல் அரசாங்கம்
பாலஸ்தீனத்தைப் பிரிப்பதற்கான ஐநா தீர்மானத்துக்கு
எதிராக வாக்களித்தது.
வல்லாதிக்கக் கூட்டுறவால் –
மே 14, 1948 இல் இஸ்ரேல் உருவானபோதுகூட –
இந்தியா அதை ஒப்பவில்லை.
துருக்கி போன்ற முஸ்லிம் நாடுகள்
அங்கீகரித்தபிறகு – அரபு நாடுகள் இஸ்ரேலுடன்
போர் நிறுத்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டபிறகு – 1950இல்தான் நேரு தலைமையிலான இந்தியா
இஸ்ரேலை அங்கீகரித்தது.
ஆனபோதும்,
அதனுடனான முழு அரச உறவை
இந்தியா ஏற்படுத்திக்கொண்டுவிடவில்லை
என்பதை அடிக்கோடிட்டுக்கொள்ளுங்கள்.
உலகமே இஸ்ரேலை
அங்கீகரிக்க நேர்ந்தபோதும்கூட – பாலஸ்தீனம்
அதன் மக்களின் உரிமைக்கு மட்டுமே உரியது
என்கிற நிலைதான் ஜவஹர்லால் நேருவினுடையது.
அது காந்தியின்
திடமான எண்ணத்தின் பிரதிபலிப்பு.
மூர்க்கர்கள் ஒன்று சேர்ந்தால் என்னாகும் என்று
அறியாதவரா காந்தி?
அதை இன்று
அனுபவித்துக்கொண்டிருக்கிறோம் பாருங்கள்!
“2008 முதல்- காசா மற்றும் மேற்குக் கரையில்
ஒரு லட்சத்து ஐம்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட
பாலஸ்தீனர்களைக் கொலை செய்திருக்கிறது
அமெரிக்க பிரிட்டன் இஸ்ரேல் கூட்டணி.
அதில் – முப்பதாயிரம் பேர் குழந்தைகள்!”
இப்படி யுரோப்பியன் பார்லிமென்டில்
கண்ணீர் வடித்திருக்கும்
ஐரிஷ் எம்பி
க்ளேர் டேலி Clare Daly –
“இஸ்ரேல் நம் நண்பன் என்று
திரும்பத் திரும்பச் சொல்லாதீர்கள்!
பாலஸ்தீனத்துக்கு யுரோப்பியன் யூனியன்
செய்திருப்பதாகச் சொல்லும்
நன்மைகளை – ஒரேநாளில் தரைமட்டமாக்கியிருக்கிறது இஸ்ரேல்!”
என்று கொந்தளித்திருக்கிறார்!