இந்தியா என்பது வெறுமனே நாடு என்ற ஒற்றை வார்த்தையில் கடந்துபோகிற ஒன்றல்ல.

மற்றெந்த நாடுகளுக்கும் இல்லாத சிறப்புகள் இதற்கு உண்டு.

பல்வேறு மதங்கள் சார்ந்த மக்கள், பல்வேறு இனங்களை சார்ந்த மக்கள், பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் என்று பூக்கள் தொடுத்த சரம் போன்று, ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து பிணக்கில்லாது பல்லாண்டுகளாக வாழ்ந்துகொண்டிருந்த பூமி இது. இதன் கலாச்சார, பண்பாட்டு, வரலாற்றுத் தொன்மை மிக மிக நெடியது. மத சுதந்திரமும், மத மறுப்பு சுதந்திரமும் கொண்ட நாடு இது.

இதை  மதச் சார்பற்ற நாடு  என்று அழைத்த இந்திய அரசியலமைப்புச் சட்டம் – அந்த எண்ணத்தை மேம்படுத்தவும், வலுவாக்கவும், வேற்றுமைகளின் நடுவே மக்கள் ஒற்றுமையான சகவாழ்வு வாழவும் ஏராளமான விதிகளை நிறுவியிருக்கிறது.

எனவே ‘இந்தியா’ என்கிற கருத்தாக்கம் உலகின் எல்லா நாடுகளையும் விருப்புடன் வியப்புடன் ஏறிட்டு நோக்கச் செய்கிறது.

இந்தப் பூமாலையை சிதறடிக்க – பிய்த்து உதற – மக்களிடையே, சாதி மதம் மொழி என்று எவ்விதமெல்லாம் வேற்றுமையைத் தூண்ட முடியுமோ, ஒற்றுமையைத் துண்டாட முடியுமோ, அத்தகைய முயற்சிகளில் அயராது ஈடுபடும் இழிந்த சித்தாந்தத்தைக் கொண்ட பழைமைவாதிகளின் கையில் இப்போது நாடு அகப்பட்டுக்கொண்டிருக்கிறது.

உலகில் எங்கெல்லாம் மதத்தின் பெயரால் , மொழியின் பெயரால், வண்ணத்தின் பெயரால் நாட்டு மக்கள் அடித்துக்கொண்டு சாவதைக் கண்டு நாமெல்லாம் வருத்தமுற்றுக்கொண்டிருந்தோமோ , அந்த நிலை இப்போது இந்தியாவுக்கே நேர்ந்திருப்பதை எண்ணி பெரும் தலைகுனிவில் இருக்கிறோம்.

நாட்டை, மக்களை, நம் ஒருமைப்பாட்டை, அமைதியான சகவாழ்வைக் காப்பாற்றப் போராடியாகவேண்டிய சூழலில் சிக்கித் தத்தளித்துக்கொண்டிருக்கிறோம்.

இப்போராட்டத்தின் சிறியதொரு முயற்சியாக , இந்தியா என்னும் சிந்தனை எனும் கருத்தரங்கத்தை 

நேரிய சிந்தனையாளர் சசிகாந்த் செந்திலின் கருத்துகளின் வழியே நிகழ்விற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்…. 

நாள் – 11/09/2023

இடம் –  VRG திருமண மண்டபம், இடையர்பாளையம், கோவை -641025

Loading