By Somasundaram : Fröm Tamilnadu, India.
“நமது மதங்கள் வேறாக இருந்தாலும் அடிப்படையில் நமது கலாச்சாரம் ஒன்றுதான். நதிகளை மதிக்க வேண்டும். சுத்தமாக இருக்க வேண்டும். உணவை அனைவரும் சேர்ந்து ஒன்றாக சாப்பிட வேண்டும். வந்தவர்களுக்கு முதலில் தண்ணீர் அருந்த கொடுப்பது, உணவு அளிப்பது, குழந்தைகளை மதிப்பது ஆகிய உணர்வுகள் நம் அனைவரிடத்திலும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளன. ஆனால், நம்மைப் பிரிப்பதற்காகக் கூறப்படும் வேறுபாடுகள் இடைக்காலங்களில் கையாளப்பட்ட உத்தியே தவிர அதில் உண்மை இல்லை. இதை இன்று அரசியலில் சிலர் கூறி வருவதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும், நமது மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும் நமது கலாச்சாரம் ஒன்றுதான் என்று காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறீர்கள்.
சைவம், வைணவம், சமணம், புத்தம் , சீக்கியம் என்ற மதங்களை எல்லாம் இந்து மதம் என்ற ஒற்றை வட்டத்திற்குள் கொண்டு வரமுடியாது என்று தெரிந்து கொண்டு இப்படிப் பேசியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
நமது கலாச்சாரமாக நிர்மலா சீத்தாராமன் கூறியிருப்பதில் முக்கியமானது. ஒன்று உணவை அனைவரும் சேர்ந்து சாப்பிட வேண்டும் அந்த உணவில் வெங்காயம் இருக்குமா ? இருக்கக் கூடாதா ? என்பதை தீர்மானிப்பது யார் ? என்ள ஒரு கேள்வியும் வருகிறது.
கலாச்சாரத்தை உருவாக்கியது யார்? என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். காங்கிரஸ் பேரியக்கத்தில் கலந்திருந்தாலும் மாநாட்டுப் பந்தலில் தனி இடம் (ஒதுக்கீடு’) கேட்டது யார் என்ற வரலாறு அவருக்குத் தெரியுமா? சமபந்தி வேண்டும் என்று போராடி, காந்தியை இணங்க வைக்க முடியாமல் போனதாலும், சுதந்திரப் போராட்ட வீரராக இருந்தாலும் தாம் நடத்திய குருகுலத்தின் போஜன சாலையில் (உணவுக் கூடத்தில் ) ‘சாதீய’ இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியதாலும், அதில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் மகன் பாதிக்கப்பட்டதாலும், காங்கிரசையும் காந்தியையும் கைகழுவி விட்டு சுயமரியாதை இயக்கத்தை பெரியார் தொடங்கிய வரலாறு அவருக்குத் தெரியுமா?
1959 இல் பிறந்த நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களுக்கு ஓரளவு கேள்வி கேட்கும் அறிவும் வரலாற்றைக் கற்றுக் கொள்ளும் அறிவும் வர குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது கடந்திருக்கும் என நினைக்கிறேன்.
சனாதனத்திற்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் பெரியார் பற்றிய வரலாற்றை நிர்மலா சீத்தாராமன் போன்றோர்கள் படிக்க வேண்டும்..
நிதியமைச்சர் சீத்தாராமனிடம் ஒரு வேண்டுகோள். முப்பத்து முக்கோடி தேவர்களுடன் நேரடியாக தேவ பாஷையில் பேசி திருமணம் நடத்தி வைக்கிறார்களே, அவர்கள் திருமணம் முடிந்தபின் உணவு பந்தியில் எல்லோருடனும் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு புறப்படச் சொல்லுங்கள். அப்போது பார்ப்போம்..
பன்பாட்டு கலாச்சாரம் பற்றி பேசியிருக்கிறார். வீட்டுக்கு வந்தவர்களுக்குத் தண்ணீர் அருந்த கொடுப்பது நமது கலாச்சாரம் என்கிறார். இது யார் வீட்டுக் கலாச்சாரம்? தவித்த வாய்க்குத் தண்ணீரைக் கொடுத்து, குடித்து முடித்த பின் சொம்பை அப்படியே வாங்கிக் கொண்டு வீட்டுக்குள் செல்லும் கலாச்சாரம் நமது கலாச்சாரமா? தண்ணீரை சொம்பிலேயே கொடுக்காமல் குனிந்து கைகளை ஏந்து ஊற்றுகிறேன் குடி என்பது நமது கலாச்சாரமா? இதில் எதை ‘நமது’ கலாச்சாரம் என்கிறீர்கள்? இந்த இழிநிலை அரசியல் சட்டத்தை எழுதிய அம்பேத்கர் அனுபவித்த அவமானங்களில் ஒன்று என்பதைச் சொல்லக்கூடாதா? பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது என்ற சீரழிவு கலாச்சாரத்திற்கு எதிராகத்தானே அம்பேத்கர் மஹத் போராட்டத்தை முன்னெடுத்தார். நமது கலாச்சாரம் என்று பொதுமைப்படுத்தி பேசுகின்ற உங்களின் சனாதனக் கூட்டம் இதற்கு எதிராக சுண்டு விரல் நகத்தையாவது அசைத்ததுண்டா?
தமிழ்நாட்டிலிருந்து சில நூறு பேரைக் காசிக்கு இலவசமாக அழைத்துச் சென்று நமது கலாச்சாரத்தின் பெருமை என்று பொய்யான கருத்துக்களை புகட்டுகிறீர்கள். நம்மை பிரிப்பதற்காகக் கூறப்படும் வேறுபாடுகள் இடைக்காலங்களில் கையாளப்பட்ட உத்தியே தவிர அதில் உண்மை இல்லை என்று பேசுகிறீர்கள். நம்மைப் பிரிப்பதற்கு என்றால் யாரிடமிருந்து யாரைப் பிரிப்பதற்கு? பிரிக்கின்ற உத்தியைக் கையாண்டது யார்? பிரிவினையை தோற்றுவித்ததும், அதை நிலை நிறுத்தியதும் யார்? பழக்கவழக்கத்தில் பிரிட்டிஷாரும் முஸ்லீம்களும் என்பீர்களா? 21 ஆம் நூற்றாண்டிலும் இந்தப் பாகுபாட்டை நீடிக்கச் செய்வது யார் என்ற உண்மை தெரிந்தும் இதெல்லாம் உண்மை இல்லை என்கிறீர்களே?
அரசியலில் சிலர் கூறி வருவதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்கிறீர்கள் ?
வரலாற்றின் கடந்த காலத்தை நினைவுபடுத்துவதும், இப்போது ஓரளவு சீரடைந்துள்ள நிலைமைக்கு எத்தனை வீரர்கள் ரத்தம் சிந்தியுள்ளார்கள் என்பதை எடுத்துரைப்பது தவறல்ல. அதுதான் அடுத்த தலைமுறையை இழிவுச் சகதிக்குள் மீண்டும் சிக்காமல் காப்பாற்றும். அது தவறு என்றால் அந்த தவறை திராவிட முற்போக்காளர்களும், ஜனநாயகவாதிகளும், சுயமரியாதை உள்ளவர்களும், அதனை உருவாக்கப் பாடுபடுபவர்களும் மீண்டும் மீண்டும் செய்து கொண்டே தான் இருப்பார்கள். அரசியலில் எதிர்க்கப்பட வேண்டியவர்கள் யார் என்றால் சனாதன சக்திகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஜால்ரா அடித்து, தாளம் தட்டி, ஒத்து ஊதுபவர்களும்தான். அதனை தமிழ்ச் சமூகம் மட்டுமல்ல, இந்திய சமூகமும் ஒன்றுபட்டு செய்யும்.
எல்லாக் காலத்தில் எல்லாரையும் ஏமாற்ற முடியாது நிர்மலா சீத்தாராமன் அவர்களே!!!