ஈழக் கவிஞர் ஒருவரைச் சந்தித்து உரையாடும் வாய்புக் கிடைத்தது. பணி நிமித்தமாக இந்தியா வந்திருந்த அவர் நேரம் ஒதுக்கி என்னைச் சந்தித்து எனது இல்லத்தில் சற்று நேரம் உணர்ச்சி பூர்வமான உரையாடலில் செலவிட்டது உண்மையிலேயே மனதுக்கு நிறைவாய் இருந்தது.
மல்லியப்பு சந்தி எனும் கவிதைத் தொகுப்பின் மூலமாக தமிழ் இலக்கியத்தோடும், தமிழ் ஈழ வரலாற்றோடும் தனக்குள்ள நெருக்கத்தை அடையாளப்படுத்தியிருக்கிறார் கவிஞர் நண்பர் திலகர் ( மயில்வாகனம் திலகராஜா ).
மல்லியப்பு சந்தி என்பதை சட்டென்ற வாசிப்பில் மல்லிகைப்பூ சந்தி என நினைத்த என்னிடம் மல்லியப்பு சந்தி என்பது ஈழப் போராட்டக் களத்தின் நுழைவாயில் என்றும், அது எப்படி ஈழப்போராட்டத்தோடு தொடர்புடையதாகியது என்றும் விளக்கினார் கவிஞர்.
குருதியின் ஈரமும், கண்ணீரின் ஈரமுமாய் விளக்கும் ஈழத்தின் சோகத்தையும், கோபத்தையும், ஏக்கத்தையும், எதிர்பார்ப்பையும் கவிஞரின் உரையாடல் பிரதிபலித்தது எனில் அது மிகையல்ல.
தலித் இலக்கியத்தை தலித் தான் எழுதவேண்டும், ஈழத்தை ஈழம் சார்ந்தவர் தான் எழுதவேண்டும் எனும் குரல்களோடு எனக்கு பெரிய அளவில் மாற்றுக் கருத்து இல்லை எனினும், தலித்தின் சோகத்தையோ, ஈழத்தின் தார்மீக உரிமையையோ அந்தந்த இன மக்களின் உணர்வுகளோடு ஒன்றி உள்வாங்கிக் கொள்ள முடிகின்ற எந்த ஒரு எழுத்தாளனும் உண்மையை நேர்மையுடன் பிரதிபலிக்க முடியும் என்பதே எனது கருத்தாகும்.
மலைவாசிகளின் வாழ்க்கையை ஒருவேளை ஒரு மலைவாசி எழுத முடியாமல் போகலாம், எனில் மலைவாசி மக்களின் உணர்வுகளோடு பின்னிப் பிணைய முடிகின்ற எழுத்தாளர்கள் அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியும்.
எனினும், சூழலில் வாழும் எழுத்தாளன் அதை எழுதும் போது அதன் வலிமை பன்மடங்கு கூடுகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
கவிஞர் திலகரும் தனது கவிதைகளில் ஈழத்தையும், சமூகத்தையும், ஈழ அரசியல் வாதிகளுக்கு உள்ளே இருக்கின்ற போலித்தனங்களையும் கவிதைகளில் வார்த்திருக்கிறார். பொதுவாகவே ஈழக் கவிதைகள் சிங்கள எதிர்ப்பாகவும், தமிழனின் கண்ணீர் குரலாகவும், போராட்டக் குரலாகவும் மட்டுமே வெளிவரும். இவருடைய கவிதைகள் தமிழ் வீதிகளில் நிலவும் போலித்தனங்களைக் கூட சற்று சுட்டிக் காட்டுகின்றன.
ஈழப் போரின் தற்போதைய உண்மை நிலவரத்தையும், தமிழீழம் உருவானால் உண்மையிலேயே மக்கள் நிறைவடைவார்களா ? இல்லை இன்னும் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்படுவார்களா எனும் ஐயம் பல்வேறு தமிழ் தலைவர்களிடம் நிலவுவதாகவும் கவிஞர் தனது உரையாடலின் ஊடாக தெரிவித்தார். விட்டுக் கொடுத்தல் எனும் சிந்தனையே கால்நூற்றாண்டு கால குருதி சாட்சிகளின் சாவுக்கு அவமரியாதை செய்வதாய் அமைந்து விடக் கூடும் எனும் பயமும் பல்வேறு தமிழ் தலைவர்களிடம் நிலவுவதாக அவரது பேச்சிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது.மல்லியப்பு சந்தி – ஒரு கவிதை நூல் எனுமளவில், கவித்துவப் படைப்பாக்க அளவில் முழுமையான திருப்தி தரும் நூலாக அமைந்தது என்று சொல்ல முடியவில்லை. எனினும் உள்ளடக்கம் சார்ந்த விஷயங்களில் வலியும், சோகமும், ஏக்கமும், எதிர்பார்ப்பும் என ஓர் ஈழக் குரல் ஓங்கி ஒலிப்பதை நூல் பிரதிபலிக்கிறது.