” பேரரசரின் புதிய ஆடைகள்”

மாற்றம் தனை வேண்டி
வகுத்தவோர் திட்டம்
 ஒற்றை இராச்சியத்தில் 
ஒரு நீதி ஓங்கிடவே!
வரப்பும் நீரும் 
நெல்லும்
உயராது விட்டாலும்
 குடிமக்கள் வயிறு
காய்ந்து மடிந்தாலும்
கோனின் பரம்பரை
 செழித்துக் கோலோச்சும்.
தர்மமும் கீர்த்தியும்
வீரமும் காத்திட வல்ல
ஆடை தனை நெய்திடவே
எட்டுத் திக்கும்
கரம் நீட்டி
இறுகிய ஆடைதனைக்
கலைத்த பேரரசன் முன்
வரிசை வரிசையாக
புதிய நெசவாளர்.
புத்திசாலிகள் ,
தரம் கொண்டோர்
கண்ணில் படும்
ஆடை தனைக்
கண்டவர்கள் இல்லை.
புலப்படாத ஆடைதனைப் 
புகழ்ந்தே 
கோலும் வற்றியது 
கனத்த கிரீடத்துடன்
நிர்வாணம்  உணர்ந்தும்
ஆடைதனை அரங்கேற்ற
ஊர்வலம் போகையிலே
 தெருவோரத்துச்  சிறுமி
குரலெடுத்துச் சொன்னாள்
"அம்மணமாகப் போகிறார்"
இரும்புக் கரங்கள் அவள் வாயை மூட
ஓங்கிய குரல்கள்
முணுமுணுத்து அடங்கின.

உமா
29.10.2021
From:https://www.facebook.com/umashanika

Source : https://www.facebook.com/umashanika

Loading