15 நவம்பர் 2022
அன்புள்ள வெளிநாட்டுத் தூதர்கள்/உயர்ஸ்தானிகர்கள்,
அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான அடக்குமுறையினை நிறுத்துமாறும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறும் இலங்கை அரசாங்கத்திடம் விடுக்கும் வேண்டுகோள்
கீழே ஒப்பமிட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சிவில் சமூக அமைப்புக்களான மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்களான நாங்கள், தொழிற்சங்கங்கள், இலங்கை அரசினால் வன்முறைமிகு முறையில் கருத்து வேறுபாடுகள் அடக்கப்படுவதையும் கருத்து வெளிப்பாட்டுக்கான மற்றும் சங்கம் அமைப்பதற்கான மக்களின் சுதந்திரங்கள் அப்பட்டமாக மறுக்கப்படுவதையும் ஆணித்தரமாகக் கண்டிக்கின்றோம்.
அமைதியான முறையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களுக்கும் பொறுப்பும் வகைப்பொறுப்புமிக்க அரசாங்கத்தினைக் கோரி முன்வைக்கப்பட்ட முறையான கோரிக்கைகளுக்கும் இலங்கை அதிகார அமைப்புக்கள் வன்முறை மூலமும் சட்டரீதியான அடக்குமுறை மூலமும் பதிலளித்துள்ளன. ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்கும் தண்டிப்பதற்கும் முறைமை வாய்ந்த வகையில் பலத்தினைப் பிரயோகிப்பது தொடர்பிலும் அடக்குமுறையின் ஒரு வடிவமாகத் தன்னிச்சையான கைதுகளையும் தடுத்துவைப்புக்களையும் பயன்படுத்துவது தொடர்பிலும் நாம் கரிசணை கொண்டுள்ளோம். பயங்கரவாதத்திற்கு எதிரான கடுமையான பயங்கரவாதத் தடைச் சட்டத்தினைப் பயன்படுத்துவதற்கான தடை பற்றிச் சர்வதேச சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவாதங்களைத் தாண்டி, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக இச்சட்டம் பயன்படுத்தப்படுவது பற்றி நாம் குறிப்பாக அச்சமடைந்துள்ளோம். அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவரான வசந்த முதலிகேயும் அனைத்துப் பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் தலைவரான சங்கைக்குரிய கல்வேவ சிறிதம்மவும் குற்றச்சாட்டுக்கள் எதுவும் இன்றிப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பினை பெறுவதற்கான வழியின்றிக் கிட்டத்தட்ட 90 நாட்களாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இந்த மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையிலும் அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்குக் குந்தகம் விளைவிக்கும் முறையிலும், தூய்மைக்கேடான வகையிலும் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் மனிதத்தன்மையற்ற நிலைமைகளை் தொடர்பாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள மாணவர்களின் குடும்பங்களும் சட்டத்தரணிகளும் மீண்டும் மீண்டும் கரிசணைகளை எழுப்பியுள்ளனர். முதலிகேயுடனும் சங்கைக்குரிய சிறிதம்மவுடனும் சேர்த்து 2022 ஆகஸ்ட் 18 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இளம் மாணவர் செயற்பாட்டாளரான ஹசான் ஜீவந்த அவருக்கு எதிராக எவ்விதமான குற்றச்சாட்டுக்களும் இல்லாத நிலையில் (50 நாட்கள் தடுத்துவைக்கப்பட்ட பின்னர்) 2022 ஒக்டோபர் 07 ஆம் திகதி நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டார்.
வசந்த முதலிகே மற்றும் சங்கைக்குரிய கல்வேவ சிறிதம்ம ஆகியோரின் தடுத்துவைப்புக்கான கட்டளைகள் 2022 நவம்பர் 18 ஆம் திகதி காலாவதியாவதற்கு முன்னர் அவர்களை உடனடியாக விடுதலைசெய்யுமாறு இலங்கை அரசாங்கத்தினைக் கோருவதில் நீங்கள் வழங்கும் ஆதரவினை நாம் மெச்சுகின்றோம். மாணவர் தலைவர்களையும் செயற்பாட்டாளர்களையும் இலக்குவைத்து நடத்தப்படும் இந்த அடக்குமுறைகளுக்கு ஒரு முடிவினை உறுதிப்படுத்துமாறும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர்களின் 90 நாட்கள் தடுத்துவைப்பு அதற்கு மேல் நீட்டிக்கப்படமாட்டாது என்பதை உறுதிப்படுத்துமாறும் நாம் சர்வதேச சமுதாயத்திற்கு அழைப்பு விடுக்கின்றோம்.
முன்னாள் ஜனாதிபதியும் பிரதமரும் நிதியமைச்சரும் அவர்களின் பதவிகளை இராஜினாமாச் செய்வதற்குக் காரணமாக அமைந்த அண்மையில் நடந்த மக்கள் எழுச்சிக்கு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தொழிற்சங்கங்களுடனும் தொழில்ரீதியானவர்களுடனும் சிவில் சமூகக் குழுக்களுடனும் சேர்ந்து இன்றியமையாத பங்களிப்பினை வழங்கியிருந்தது. அதீத பணவீக்கமும் ஆழமாகிச் செல்லும் பொருளாதார நெருக்கடிகளும் நாட்டினைச் சூழ்ந்துள்ள நிலையில் தாங்கமுடியாத அளவுக்குப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்திருப்பதற்கு எதிராகவும் மோசமான ஆட்சிக்கு எதிராகவும் ஊழலுக்கு எதிராகவும் அரச வகைப்பொறுப்பு இல்லாதிருப்பதற்கு எதிராகவும் மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்திவருகின்றனர். ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதி பதவியின் கீழ் சடுதியாக அதிகரித்துள்ள அரச அடக்குமுறை உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துவருகின்றனர். பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச்செல்லும் விதமாக இலங்கை அரசாங்கம் நடந்துகொள்வதற்கு எதிரான அழுத்தத்தினை உறுதிப்படுத்துவதிலும் அமைதியான முறையில் கருத்து வேறுபாடுகளைக் காட்டுவதன் மீதான அடக்குமுறைகளுக்கு எதிரான அழுத்தத்தினை உறுதிப்படுத்துவதிலும் இன்றியமையாத வகிபாத்திரத்தினை வகித்த சர்வசேத சமுதாயத்தின் உதவியினை ஆர்ப்பாட்டக்காரர்களினால் பெறக்கூடியதாக இருந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான அரச அடக்குமுறை தொடர்பாகவும் நாட்டில் சுருங்கி வரும் குடிமைச் சுதந்திரம் தொடர்பாகவும் அரசுக்கு பதிற்செயற்பாடாற்றுவதில் ராஜதந்திர சமுதாயம் மற்றும் கருத்து வெளிப்பாட்டுக்கான சுதந்திரம், மனித உரிமைப் பாதுகாவலர்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் மீதான ஆணைகள் உள்ளடங்கிய ஐக்கிய நாடுகள் விசேட நடவடிக்கைமுறைகள் ஆகியவை மேற்கொண்ட மேற்பார்வையினையும் ஈடுபாட்டினையும் நாம் மெச்சுகின்றோம். எனவே, மாணவத் தலைவர்களான வசந்த முதலிகே மற்றும் சங்கைக்குரிய தேரரான சிறிதம்ம ஹிமி ஆகியோரின் விடுதலையைக் கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளிப்படுத்தும் குரலை வலுப்படுத்துவதில் நீங்கள் வழங்கும் உதவியானது, மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் ஜனநாயக விழுமியங்களைப் போஷிப்பதற்கும் இன்றியமையாதது என நாம் நம்புகின்றோம். சர்வதேச சமுதாயத்தில் சில குறிப்பிட்ட தரப்பினர்கள் ஜனாதிபதி விக்கிரமசிங்கவிற்கும் தற்போதைய பொருளாதார நெரு்கடியினைத் தீர்ப்பதற்கான அவரின் உத்தேச திட்டத்திற்கும் சார்பான நிலைப்பாட்டினைக் கொண்டுள்ள போதிலும், பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்களை நசுக்குவதற்கான, மக்களின் கருத்துவெளிப்பாட்டுக்கான மற்றும் சங்கம் அமைப்பதற்கான சுதந்திரங்களைக் கட்டுப்படுத்துவதற்கான அவரின் பழிபாவங்களுக்கு அஞ்சாத திட்டங்கள் ஒருபோதுமே பொறுத்துக்கொள்ள முடியாதவை என்பதை நாம் வலியுறுத்த விரும்புகின்றோம்.
பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடி சூழ்ந்துள்ள இந்தக் காலகட்டத்தில், அரசாங்கம் அதன் மக்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அடுத்த வருடம் மீளாய்வு செய்யப்படவுள்ள GSP+ சலுகைகள் மீது தாக்கத்தினை ஏற்படுத்துமா என்பதையிட்டு நாம் மிகுந்த கரிசணை கொண்டுள்ளோம். இலங்கையுடனான சகல ஈடுபாடுகளும் தெளிவான மற்றும் வெளிப்படைத்தன்மைமிக்க மனித உரிமைகள் நியமக்குறிகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்தினை நாம் கொண்டுள்ளோம் – உண்மையான நிலைமாற்றத்தினை உறுதிப்படுத்துவதற்காகவும் இவை மீண்டும் மீண்டும் நிகழ்வதைத் தடுப்பதற்காகவும் இது வர்த்தகத்தினையும் நிதி ஈடுபாட்டினையும் உள்ளடக்குகின்றது. தவறான தகவல்களின் மூலமும் பிழையான தகவல்களை வேண்டுமேன்றே வழங்குவதன் மூலமும் பிரசைகளின் ஆர்ப்பாட்டங்களுக்கு முத்திரை குத்தி அவற்றினைக் குற்றச்செயல்களாக ஆக்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சியும் GSP+ இழக்கப்படும் வாய்ப்பிற்கான பழியினை ஆர்ப்பாட்டக்காரர்களின் மீதும் பிரசைகளின் மீதும் போடுவதற்கான அரசாங்கத்தின் முயற்சியும் நேர்மையற்றதும் ஏற்றுக்கொள்ள முடியாததும் ஆகும். பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச்சென்ற அரசாங்கத்தின் அடக்குமுறைமிக்க ஆணையினையும் சட்டக்காப்பினையும் ஊழலையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டு அவற்றினை வாபஸ் பெறவேண்டும்.
யுத்தம் முடிவுக்கு வந்த பின்பும் தற்போது 13 வருடங்களாகப் பயன்படுத்தப்பட்டு வரும் எவ்வடிவிலுமான பயங்கரவாதத் தடைச் சட்டமும் நீக்கப்பட வேண்டும் எனச் சிவில் சமூக அமைப்புக்கள் என்ற ரீதியில் நாங்கள் தொடர்ந்து ஆதரித்து வாதாடி வருகின்றோம். இக்கொடுமையான சட்டம் இலங்கை மக்களின் உரிமைகளையும் சுதந்திரங்களையும் மீறுவதற்காகவும் குறிப்பாகத் தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினரை நசுக்குவதற்காகவும் கருத்து வேறுபாடுகளைச் சுருக்குவதற்காகவும் குறிப்பாக, அரசாங்கத்தினை விமர்சிக்கும் குரல்களைச் சுருக்குவதற்காகவும் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என நாம் நம்புகின்றோம். பயங்கரவாத விசாரணைப் பிரிவின் (TID) அறிக்கையின் படி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இற்றைவரை மொத்தமாக 127 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் மேலும் 11 நபர்கள் கட்டுக்காவலில் இருக்கையிலேயே மரணித்துள்ளனர்.
எனவே, இலங்கையின் உரிமைகளையும் சுதந்திரங்களையும் பாதுகாப்பதற்கான எமது போராட்டத்திற்கு உதவுமாறு மேன்மைமிக்கவர்களாகிய உங்களிடம் நாம் அழைப்பு விடுக்கின்றோம். சிவில் சமூக அமைப்புக்களாலும் மாணவர் இயக்கங்களாலும் சங்கங்களாலும் சாதாரண பிரசைகளாலும் களத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளுக்கு உங்களின் ஆதரவு முக்கியமான பங்களிப்பாக இருக்கும். இலங்கையர்களின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்படுவதை உடனடியாக நிறுத்துமாறும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான அனைத்து வடிவிலுமான துன்புறுத்தல்களையும் அச்சுறுத்தல்களையும் உடனடியாக நிறுத்துமாறும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறும் இக்கொடிய சட்டத்தினை நீக்குமாறும் இலங்கை அரசாங்கத்திற்கு நாம் விடுக்கும் அழைப்புக்கான உங்களின் ஆதரவினையும் நாம் கோரி நிற்கின்றோம்.