From Sevvilam Parithi
சமூகம்
நீதித்துறை
நீதித் துறையின் கலங்கரை விளக்கம் என்.டி.வி!
ரதன் சந்திரசேகர்
September 11, 2023
கருணை நிறைந்த கம்யூனிஸ்ட் வழக்கறிஞர் என்.டி.வி! தனிமனித ஒழுக்கத்தின் சிகரம்! எவ்வளவு பணம் தந்தாலும் தவறான நபர்களுக்காக வாதாடமாட்டார். பல புகழ்பெற்ற வழக்குகளின் வழக்கறிஞர்! பல நீதிபதிகளை உருவாக்கியவர். இவர் எப்படி தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றார்..!
என் டி வானமாமலையின் நூற்றாண்டு நிறைவையொட்டி, அவருக்கான ஒரு நினைவு மலரை – இஸ்கப் அமைப்பினர் செப்டெம்பர் 9 ஆம் நாள் – சென்னையில் வெளியிட்டார்கள். அத்துடன் அவருக்குப் புகழஞ்சலி செலுத்தும் கருத்தரங்கமும் நடைபெற்றது. அவரது நூற்றாண்டு நினைவு மலரை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா வெளியிட, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் நீதிபதிகள் கே.சந்துரு, கே.என்.பாஷா உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்.
எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டம் வலுத்து எங்கும் ஜேக்டோ ஜியோ அமைப்புகளின் போராட்டம்தான் ஒரே பேச்சாக இருந்தது. தமிழ்நாடு அரசு பலபேரை பணியிலிருந்து நீக்கியதன் விளைவாக, தொழிற்சங்கங்கள் நீதிமன்றத்தை நாடவேண்டி வந்தது. அரசு ஊழியர் ஆசிரியர்கள் சார்பாக வாதாடிய அந்த வழக்கறிஞர் அவர்களுக்குப் பெரும் வெற்றியை ஈட்டித் தந்தார்.
சங்கப் பிரதிநிதிகள் அவருக்கு வாழ்த்துச் சொல்லுவதற்காகவும், வழக்காடியதற்கான கட்டணத்தை செலுத்துவதற்காகவும் அவர் அலுவலகத்துக்கு வந்தார்கள். அவர்கள் கொண்டு வந்திருந்த பழக்கூடையிலிருந்து ஓர் ஆப்பிள் பழத்தை மட்டும் எடுத்துக் கொண்ட அந்த வழக்கறிஞர், அதையும் துண்டங்களாக்கி அவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து விட்டு, அவர்கள் கொடுத்த வழக்குக் கட்டணத்தை வாங்க மறுத்தார்.
அவர் சொன்னார் : “ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை சிறந்த குடிமகன்களாக உருவாக்குங்கள்; அரசு ஊழியர்கள் நேர்மையான நிர்வாகத்துடன் எளிய மக்களுக்கு உதவுங்கள். அதுவே நான் உங்களிடம் எதிர்பார்க்கும் கட்டணம்!”
அந்த வழக்கறிஞரின் பெயர் என்.டி,வானமாமலை. என்.டி.வி என்றால் அந்நாள்களில் அவ்வளவு பிரசித்தம். எம்.ஆர்..ராதா எம்ஜிஆரை சுட்ட வழக்கு என்றால், பலருக்கும் என்டிவியின் பெயர் நினைவுக்கு வரக்கூடும்.
அன்றைய கல்கத்தாவில் தோல் தொழிற்சாலை நடத்திவந்த நாங்குநேரி திருவேங்கடாச்சாரிக்கு மகனாகப் பிறந்தார் வானமாமலை. தீவிர ஆச்சாரமான வைஷ்ணவக் குடும்பம். கட்டுக் குடுமியும், நெற்றியில் தீற்றிய நாமமுமாக கல்லூரிக்குப் போன என்டிவி, ஒரு தீவிர நாத்திகராகவும், கம்யூனிஸ்டாகவும் மாறி, வாழ்நாளெல்லாம் தொழிலாளி வர்க்கத்துக்காக தன் சட்ட அறிவைப் பயன்படுத்தி, அவர்களுக்கு நீதி பெற்றுத் தருவதை வாழ்நாள் கடமையாக வைத்திருந்தார் என்றால் நம்ப முடிகிறதா?
அக்கால இளைஞர்களை ஆகர்ஷித்த சோவியத் புரட்சியும், சோவியத் யூனியனின் புரட்சிகர அரசாங்கமும் என்டிவியையும் ஈர்த்ததில் விந்தை இல்லை. படிக்கும் போதே, நெல்லை மாவட்டக் கம்யூனிஸ்டுகளுடன் ஏற்பட்ட தொடர்பு அவரை பல்வேறு போராட்டக் களங்களில் செயலாற்ற வைத்தது. ஒரு கம்யூனிஸ்ட்டாக தன்னை பகிரங்கமாக அறிவித்துக் கொண்ட அவர், அன்று நெல்லையில் பேசாத பொதுக் கூட்டங்கள், கலக்காத போராட்டங்கள் இல்லை என்று சொல்லுமளவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னைப் பிணைத்துக் கொண்டார்.
பிரசிடென்சி கல்லூரியில் வேதியியலில் பி எஸ் சி பட்டம். பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பு. நெல்லையில் முன்னணிக் குற்றவியல் வழக்கறிஞர் கே பி பாலாஜியிடம் ஜூனியராக பயிற்சி பெற்ற என்டிவி, பின்னாளில் பிரபல வழக்கறிஞர் மோகன் குமாரமங்கலத்துடன் இணைந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடத் தொடங்கினார்.
கொஞ்சக் காலத்திலேயே அவரது சட்ட அறிவும் வாதத் திறமையும் அவரை மிகப் பெரிய வழக்கறிஞராக நாடறியச் செய்தது.
கம்யூனிஸ்டுகள் மீதான நெல்லை சதிவழக்கு, மதுரை சதி வழக்கு, எம்ஜிஆர் சுடப்பட்ட வழக்கு, கருணாநிதி மீதான சர்க்காரியாக் கமிஷன் வழக்கு, சென்னை பாண்டிபஜாரில் இலங்கைப் போராளிகள் பிரபாகரனும், உமா மகேஸ்வரனும் துப்பாக்கிகளைக் கொண்டு சுட்டுக் கொண்ட வழக்கு, இந்திரா படுகொலைக்குப் பிற்பாடு கோவையில் சூறையாடப்பட்ட சீக்கியர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு பெற்றுத் தந்த வழக்கு என்று என்.டி.வானமாமலை நடத்திய வழக்குகளெல்லாம் மிகப் பிரபலமான வழக்குகள்.
குறிப்பாக 1948ல் நெல்லை மாவட்ட கம்யூனிஸ்ட் சதி வழக்கு, என்.டி.விக்கு பெரும் பெயர் வாங்கிக் கொடுத்தது. தன்னுடைய அபார வாதத் திறமையால், இன்றைய முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவராக உள்ள நல்லக் கண்ணு உள்ளிட்ட 90 பேரை அன்று மரண தண்டனையில் இருந்து விடுவித்தவர் என்.டிவி.!
வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், அவரது வாரிசு குருசாமி நாயக்கரை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றியவர் என்.டி.வி என்பது பலருக்கும் தெரியாததாகும்! தூக்குத் தண்டனை குறித்து பெரிய அளவில் விவாதங்கள் எழாத அந் நாள்களிலேயே தூக்குத் தண்டனைக் கைதி குருசாமிக்காக வாதாடி அவரை மரணத்திலிருந்த என்.டி.வி காப்பாற்றிய வழக்கு பரபரப்பாக நீதித்துறை வட்டாரங்களில் பேசப்பட்டது.
எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்ட போது நீதிமன்றத்தில் எம்.ஜி.ஆரை சுமார் ஆறுமணி நேரம் கூண்டில் நிறுத்தி கேள்விக் கணைகளால் துளைத்த போது, எம்.ஜி.ஆர் திணறினார். அதே அமயம் எம்.ஜி.ஆர் குறித்த நிறைய அந்தரங்க விவகாரங்களை அறிந்திருந்த போதும், அதை வெளிப்படுத்தாமல் கண்ணியமாகவே எம்.ஜி.ஆரைக் கையாண்டார்.
பல உயர் தகுதிகளால் பலமுறை நீதிபதி பதவிகள், அட்வகேட் ஜெனெரல் பதவிகளெல்லாம் அவரைத் தேடி வந்தபோதெல்லாம் அவற்றை ஒதுக்கித் தள்ளிவிட்டார் என்டிவி. அவரது ஜீனியர்களில் பலரே பின் நாட்களில் நீதிபதியாக உயர்ந்தனர். ஆனால், அவரோ, வாழ்நாள் இறுதிவரை ஒரு கம்யூனிஸ்டாகவும், எளிய மக்களின் குரலாகவும் இருந்தார்!
நாடே கண்டு வியந்த அவ்வளவு பெரிய வழக்கறிஞர் என்டிவி, கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களுக்கும், கட்சியின் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கும் வாதாட நேர்ந்த போதெல்லாம், அவர்களிடம் ஒரு ரூபாயைக் கூட கட்டணமாகப் பெறாமல் வாதாடி நீதி பெற்றுத் தந்தார் என்பது தான் அவரின் சிறப்பு.
அவரின் இந்த குணநலன் குறித்து விளக்கிச் சொல்ல நமக்கு ஒரே ஒரு எடுத்துக் காட்டை சொன்னால் போதுமானது. பொன்னீலனின் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற ‘புதிய தரிசனங்கள்’ நாவலில் இப்படி சில வரிகள் வருகின்றன : “முண்டம், நான் சொல்லிக்கிட்டிருக்கேன், நீ அழுதுக்கிட்டிருக்கியே” ஊசிக்காட்டான் மனைவியை நெருங்கி, அவள் முதுகை ஆதரவாகத் தட்டினான். “ஒன் மகனுக்கும் ஒண்ணும் ஆகாது. பேசாமத் தூங்கு. அதுக்குரிய ஆளுவ இருக்காவ. காப்பாத்துவாவ. நம்ம தலைவரு பாத்தியா…. பெரிய பெரிய வக்கீலுமாரு இருக்காவ. வானமாமலைன்னு ஒரு வக்கீலு, ரொம்பப் பெரியவரு…”
Also read
முட்டாள்களை உருவாக்கவே இந்தக் கல்விக் கொள்கை!
களைகட்டிய அறம் நான்காம் ஆண்டு விழா!
தெருவில் வித்தைகள் காட்டி பிழைக்கும் கழைக் கூத்தாடிகளுக்காக கட்டணமின்றி வாதாடி அவர்களின் உரிமையை வென்று தந்தார் அவர். வானமாமலை எழுதிய, ‘சோவியத் யூனியனில் நீதி பரிபாலனம்’ என்ற புத்தகமும், ‘காந்தி முதல் கோர்பச்சேவ்’ என்ற புத்தகமும் அவரின் சட்டப்பார்வை, அரசியல் பார்வை இரண்டையும் தெளிவாக விளக்கிச் சொல்லும்.
இந்திய சோவியத் கலாச்சாரக் கழகம் (ISCUS) அமைப்பின் அகில இந்தியத் தலைவர்களுள் ஒருவராகவும், தமிழ்நாடு பொதுச் செயலாளராகவும் தொண்டாற்றிய என்டிவி, அந்த அமைப்பு, சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு, இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் (ISCUF) என்று பெயர்மாற்றம் கண்டு தொடர்ந்தபோது, அதன் தமிழகப் பொதுச்செயலாளராகவும் நெடுநாள் பணியாற்றினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கலாச்சார நட்புறவுக் கழகமும் என்டிவிக்கு இரண்டு கண்கள் என்று சொல்லலாம்.
கட்டுரையாளர்; ரதன் சந்திரசேகர்
எழுத்தாளர், திரைப்பட இயக்குனர்