சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் நாளினை முன்னிட்டு மாபெரும் கவனயீர்ப்பு பேரணி ஒன்று வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகளின் சங்கத்தினரால் மன்னார் மாவட்டத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டமானது மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களின் சங்கத்தின் தலைவி திருமதி மனுவல் உதயச்சந்திரா அவர்களின் தலைமையிலே இடம்பெற்றது. இதில் அம்பாரை, திருகோணமலை, வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவிகள் நிருவாகிகள்,உறுப்பினர்கள் மற்றும் உறவுகள் கூட்டாக இணைந்து இந்த போராட்டத்தினை மிகவும் நேர்த்தியாக முன்னெடுத்திருந்தனர்.
மன்னார் சதோச மனித புதைகுழியில் ஆரம்பமான குறித்த போராட்டம் மன்னார் சுற்று வட்ட பாதை ஊடாக தபாலகம் வைத்திய சாலை ஊடாக மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இறுதி நிகழ்வுடன் நிறைவடைந்தது.
போராட்டதில் ஈடுபட்டவர்கள் கறுப்பு கொடிகளை ஏந்தி காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் புகைப்படங்களை சுமந்து பல்வேறு கோஷங்களை எழுப்புயவாரு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதகுருமார், ஊடகவியலாளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதிக்கான கோரிக்கைகள், அரசியல் கைதிகளுடைய விடுதலை,பெளத்த மயமாக்கல், தொல்லியல் வன இலாகா போன்றோரினதும் மற்றும் சிறீலங்கா இராணுவத்தினரின் தமிழர் தேச அபகரிப்புகள் ,குருந்தூர் மலை வெடுக்குநாறி மலை போன்ற தமிழர் தேச பூர்வீகங்கள் மீதான அத்துமீறல், சிறீலங்கா இராணுவத்தினுடைய அடாவடிகள், சிறீலங்கா பாதுகாப்பு தரப்புகள் மற்றும் புலநாய்வாளர்களின் அச்சுறுத்தல்களுக்கு எதிரான கோசங்களோடும் வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்ற கோசங்களை எழுப்பி பல கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தனர்.
இந்தப் போராட்டத்தில் பல தமிழ் அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கான தங்களுடைய ஒத்துழைப்பையும் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுமார் 1500 முதல் 1800 பேர் வரையிலான பொதுமக்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டிருந்தார்கள் என்பதோடு பேரணியின் நிறைவிலே மைதானத்தின் மத்தியிலே ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றும் நிகழ்த்தப்பட்டது. இவ் ஊடகவியலாளர் சந்திப்பிலே மன்னார் மாவட்ட தலைவி மற்றும் ஏனைய மாவட்டத் தலைவிகளும் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டதோடு இந்த போராட்டம் எமது அடுத்த தலைமுறையிடமும் சென்றிருக்கின்றது என்பதை காட்டக் கூடிய வகையில் மன்னார் மாவட்டத் தலைவியின் பேரனால் இன்றைய நாளுக்கான அறிக்கையும் வாசிக்கப்பட்டதோடு மதகுருக்களுடைய கருத்துக்களும் பகிரப்பட்டு கலந்து கொண்ட மாவட்ட தலைவிகள் அனைவராலும் ஐக்கிய நாடுகள் சபைக்குக் கொண்டு சேர்ப்பதற்காக மதகுருக்களிடம் மனுவும் கையளிக்கப்பட்டதோடு கலந்து கொண்ட பொதுமக்களிலும் சிலர் தங்களுடைய ஆதங்கங்களையும் கருத்துக்களையும் வலிகளையும் பகிர்ந்திருதனர்.