என்னைப் பற்றி எதுவும் சொல்லக்கூடாது என்பது என் கொள்கை.

By Sevvilam Parithi.

தமிழ்நாட்டின் எல்லா இடங்களையும் சார்ந்தச் சாதாரண தோழர்கள் ,முக்கிய தோழர்கள், தியாகிகள் பற்றி கண்டிப்பாக விவரமாக எழுத வேண்டும். இவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாட்டில் வளர்ச்சி அடைவதற்கு மூல புருஷர்களாக இருந்தவர்கள் என்று தனது ஆவலைக் கூறிய தோழர் சி.எஸ். சுப்பிரமணியம், *என்னைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது. அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லை. என்னைப் பற்றி எதுவும் கூறக்கூடாது என்பது எனது கொள்கை * என்று கூறி தம்மைப் பற்றி தகவல் எதுவும் தராதவர். தன்னடக்கம் காரணமாகவே அவர் தன்னைப் பற்றிய தகவல் தர மறுத்துவிடுவார்.

  தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள கோமல் கிராமத்தில் பிறந்த இவரது தந்தை சுந்தரம் அய்யர் மாவட்ட கல்வி அதிகாரியாக இருந்தவர். பின்பு சென்னை சைதாப்பேட்டைக்கு மாறுதலில் சென்றார். 1910 ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி சைதாப்பேட்டையில் பிறந்தவர் தோழர் சி. எஸ். சுப்பிரமணியம். தோழர் பி. ராமமூர்த்தி உடன் சென்னை மாநிலக் கல்லூரியில் படித்தார். இந்து பத்திரிக்கையின் அதிபரின் உதவியோடு அவரது தகப்பனார் அவரை ஐ.சி.எஸ்.படிக்க இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார். படிப்பில் முதல் மாணவனாகத் திகழ்ந்த தோழர் சி. எஸ். சுப்பிரமணியம் மெலிந்த உருவம் கொண்டவர்.அதே நேரத்தில் நெஞ்சில் உறுதி கொண்டவர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலேயே இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டுமென்ற முழக்கத்தை முன் வைத்தவர். துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டவர்.

   இதன் விளைவாக தேர்வை எழுதாமல் தன் தாய் நாட்டிற்கு திரும்பினார். மகன் கலெக்டராக திரும்புவான் என்று எதிர்பார்த்து ஏமாந்த அவரது தந்தை இந்து பத்திரிகை ஆசிரியரை சந்தித்து ஆசிரியர் குழுவில் சேர்த்துவிட்டார். ஒரு வருட காலம் தான் இந்து பத்திரிக்கையில் பணியாற்றினார்.

  இங்கிலாந்தில் இருந்த போது பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து டெய்லி ஒர்க்கர் என்ற கம்யூனிஸ்ட் பத்திரிக்கையில் சில காலம் தான் பணியாற்றினார். 1933ல்  இந்தியா திரும்பினார்.

    இந்தியாவிற்கு வந்த பிறகு சென்னையில் தொழிற்சங்க இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டார். அதே நேரத்தில் வர்த்தக நிறுவனம் ஒன்றிலும் உயர் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தார். 1936 ஆம் ஆண்டு தோழர்கள் சுந்தரய்யா, காட்டே ஆகியோரின் கூட்டு முடிவுப் படி தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை உருவாக்கப்பட்டது. இந்த முதல் கட்சிக் கிளை பி.ராமமூர்த்தி, பி. சீனிவாச ராவ், ஜீவா, ஏ எஸ் கே, சி. எஸ். சுப்பிரமணியம், கே. முருகேசன், நாகர்கோவில் சி.பி.இளங்கோ,டி. ஆர். சுப்பிரமணியம், திருத்துறைப்பூண்டி முருகேசன் ஆகியோரை உள்ளடக்கியதாக இருந்தது.இந்த கிளைக்கு செயலாளர் என்று யாரும் கிடையாது. கூட்ட நிகழ்ச்சிகளை (மினிட்ஸ் ) எழுதுபவர் தான் கிளைச் செயலாளராக கருதப்பட்டார்.கூட்ட நிகழ்ச்சிகளை நான்தான் எழுதி வந்ததாக தோழர் சி.எஸ்.சுப்பிரமணியம் கூறுகின்றார்.

   1942 ல் சிறையிலிருந்து விடுதலை பெற்ற தோழர்கள் தமிழகத்தில் கட்சி அமைப்பை உருவாக்கினார்கள். கட்சி மீது இருந்த தடை நீக்கப்பட்டதால் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி, காங்கிரஸ்காரர்கள் என்ற பெயர்களில் செயல்பட்டவர்கள் பகிரங்கமாக செயல்பட்டு அமைப்பை உருவாக்கினர். மோகன் குமாரமங்கலம் மாநில செயலாளராகவும்,எம். ஆர். வெங்கட்ராமன் உதவிச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைப்பு உருவானது. இந்த அமைப்பின் மாநிலக் குழு உறுப்பினர்களாக பி. ராமமூர்த்தி, பி. சீனிவாச ராவ், ப.ஜீவானந்தம், எம். கல்யாணசுந்தரம், சி.எஸ்.சுப்பிரமணியம், ஆர். கே. கண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 கட்சியின் செயல்பாடுகளுக்கும் மக்களோடு இடையறாக தொடர்பு கொள்வதற்கும் மிகவும் அவசியமான ஜனசக்தி பத்திரிக்கை துவக்கப்பட்டது. ஒரே மாதத்தில் ரூபாய் 1600 வசூலிக்கப்பட்டு ஜனசக்தி முதல் இதழ் 1942 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியானது. கட்சியின் மாநிலத் தலைமையில் பொறுப்புக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. அதில் ஜனசக்தி ஆசிரியர் குழு, நிர்வாகம், அச்சகப் பொறுப்பு ஆகியன தோழர் சி. எஸ். சுப்பிரமணியத்திற்கு பகிர்ந்த ளிக்கப்பட்டது.

   படாடோபமற்றவர். நுணுக்கமாகவும், குற்றம் குறைவின்றி ரகசியமாகவும் வேலை செய்வதில் வல்லவர் தோழர் சி.எஸ். சுப்பிரமணியம். கொடுத்த வேலையைச் செவ்வனே செய்வதில் இவருக்கு இணை இவர்தான். ஒரு வேலையை இவரிடம் ஒப்படைத்து விட்டால் அது பற்றி கவலைப்படாமலேயே இருந்து விடலாம்.இவர் சற்றே கடுகடுப்பானவர். கண்டிப்பானவர். எனவே இதர தோழர்கள் இவரைக் கண்டு சற்றே பயப்படுவர். 1942 ல் சிறையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு 1946 வரை ஜனசக்தியின் ஆசிரியராகவும் கட்சி பொறுப்புகளிலும் இருந்துள்ளார். 1948 இல் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சார்ந்த சுகுணா பாய் என்பவரை மணந்து கொண்டார். இவர் ஒரு மருத்துவர்.

    தென்னிந்திய ஆய்வுக் கழகத்தின் பொறுப்பாளராக இருந்து பல ஆராய்ச்சி நூல்களை வெளியிட்டவர். சென்னை சதி வழக்கில் கைதாகி மூன்றரை ஆண்டு காலம் கடுங்காவல் தண்டனை பெற்றவர். 1982 – 83 ஆம் ஆண்டுகளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் லாலா லஜபதி ராய் நினைவுச் சொற்பொழிவாற்றியுள்ளார். “இந்தியா”வின் கட்டுரைகளை மொழிபெயர்த்துள்ளார். 1938 ஆம் ஆண்டில் கட்சியில் சேர்ந்த இவர், இந்திய விடுதலைப் போரில் காங்கிரசாரை விட  கம்யூனிஸ்ட்டுகளே உண்மையாக போராடினார்கள் என்பதில் உறுதியாக அசைக்கும் முடியாத நம்பிக்கையோடு இருந்தவர்.

    தென்னிந்தியாவில் முதல் கம்யூனிஸ்ட் என்று கருதக்கூடிய, தோழர் லெனினை நேரடியாக சந்தித்தவர்களில் ஒருவரான மண்டயம் பிரதிவாதி பயங்கரம் திருமலாச்சாரியாவின் ( M.P. T.)  ஆச்சாரியா) வாழ்வும் காலமும் என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 17 வது கட்சி காங்கிரஸ் 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 முதல் 19 வரை தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் நடந்ததை ஒட்டி, our Party’s Growth in Tamil Nadu (a brief Sketch)  என்ற நூலை எழுதி வெளியிட்டார். 1931 – 1932, 1934 இல் கட்சி முறையில் பணியாற்றும் ஒரு குழுவை ஏற்படுத்தி அது ஒரு கட்சி அமைப்பாக இயங்க பழக்கி கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு மூலக்கர்த்தாவாக இருந்த தோழர் தாதா அமீர் ஹைதர் கான் என்று அன்பாக அழைக்கப்பட்ட முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரின் சுய சரிதையின் ஒரு பகுதியாக தென்னிந்தியாவைக் கண்டேன் என்ற நூலை ஆங்கிலத்தில் பதிப்பித்தவர் தோழர் சி.எஸ். சுப்பிரமணியம்.

   தன் கையெழுத்தால் அமீர் ஹைதர் கான் தமிழ்நாட்டிற்கு வந்தது,1933ல் காட்டே சென்னை வந்து கட்சி அமைப்பை உருவாக்கியது, 1942 பம்பாய் மகாநாடு போன்றவற்றை எழுதியுள்ளார். அது முற்றுப் பெறாத கையெழுத்துப் பிரதியாக கட்சி அலுவலகத்தில் உள்ளது. அதில் காந்தியடிகளுடன் உரையாடிய விவரமும் உள்ளது. இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்ற தலைப்பில் தோழர் சிங்காரவேலர் பற்றி, தோழர் கே. முருகேசனுடன் இணைந்து நூல் ஒன்றை வெளியிட்டார். கட்சியிலிருந்து வெளியேறிய இவர் கடைசிவரை கம்யூனிஸ்ட் உறுப்பினராக இல்லாதிருந்தார். அதே நேரத்தில் எப்போதும் கட்சிக்கு உதவி வந்துள்ளார்.

  கோவிலில் பூஜை செய்யும் பூசாரி நமக்குப் புரியாமல் ஏதோ உளறுவதைச் சடங்காகச் செய்வதைப் போல உலகம் முழுவதும் மார்க்சை, அவரது தத்துவத்தை அறியாமல் பல விஷயங்களைச் சடங்காகச் செய்து வருவதாகவும், குறிப்பாக இந்தியாவில் மதம்,மொழி போன்றவற்றால் இன்னும் நிலைமை மோசமாக இருப்பதாகவும் எண்ணியவர். Ownership of  Producion தொழிலாளியின் கையில் வர வேண்டும் அது வராமல் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வருவது என்பது ஆபத்தானது என்றவர் தோழர் சி. எஸ். சுப்பிரமணியம். உழைக்கும் மக்களின் வாழ்வு மேம்பட கம்யூனிசமே வழிவகுக்கும் என்று உறுதியோடு வாழ்ந்தவர்.

  இந்தியப் பாதுகாப்பு விதிகளின்படி தேடப்பட்டு வரும் சி.எஸ்.சுப்பிரமணியம் என்ற  நபரைக் கைது செய்வதற்கு உதவினால் நூறு ரூபாய் இனாம் என்று அறிவிக்கும் அளவிற்கு வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த தோழர் சி எஸ் சுப்பிரமணியம் அவர்களின் பிறந்த தினம் இன்று –

2l.12. 1910.

Loading