போராட்ட களத்தில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம் –  சுதந்திர  ஊடக இயக்கம்

22. 07. 2022

ஊடக அறிக்கை

போராட்ட களத்தில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம் –  சுதந்திர  ஊடக இயக்கம்

ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள்,அதாவது இன்று (22.07.2022) அதிகாலைக் காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய மனிதாபிமானமற்ற மற்றும் அருவருப்பான தாக்குதலைச் சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. குறித்த சம்பவங்களைத் அறிக்கையிட்டுக் கொண்டிருந்த  உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளதுடன், அவர்களது கமெரா உபகரணங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஊடகவியலாளர்கள்மீது நடாத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் சேதங்கள்குறித்த முழுமையான தகவல்கள்  இன்னும் கிடைக்கப் பெறவில்லை. காலிமுகத்திடல் போராட்டக்களத்திற்கு நுழையும் அனைத்து வீதிகளும் அடைக்கப்பட்டுள்ளதால், இன்று காலையில் கூட ஊடகவியலாளர்களுக்கு உள்ளே செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மதகுருமார்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி சமூகத்தினர் மீதும் ராணுவத்தினர் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியதாகவும், தாக்குதலில் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களை சிகிச்சைக்காகக் கொண்டு செல்வதை கூடப் பாதுகாப்புப் படையினர் தடுத்துவருவதாகவும் போராட்டப் பகுதியில் இருந்த ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.  சட்டத்தரணி நுவன் போபகே உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தொடர்பான மேலதிக தகவல்களைப் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி செயலக வளாகத்தை விட்டு வெளியேறப்போவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் பகிரங்கமாக அறிவித்திருந்த நிலையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது போன்ற ஆயுதப் படைகளைப் பிரயோகிப்பதற்கான எவ்வித தேவைப்பாடும் இல்லை என்பது மிக்க தெளிவான விடயமாகும். மேலும் இது இலங்கை எதிர்கொண்டுள்ள துரதிஷ்டவசமான தலைவிதியை மேலும் மோசமாக்கும் ஒரு முட்டாள் செயலாகும்.

இந்தத் தாக்குதல் குடிமக்களின் அமைதியான முறையில் போராட்டம் மேற்கொள்ளும் உரிமை, கருத்துக்களை வெளியிடும் உரிமை, சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற கோரமான இம்சைகளிலிருந்து விடுபடுவதற்கான உரிமை, பத்திரிகையாளர்கள் தங்கள் தொழிலில் ஈடுபடும் உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக  வலுவாக வலியுறுத்திக்கொள்ளும் சுதந்திர ஊடக இயக்கம்.  ஊடக சமூகம் மற்றும் வழக்கறிஞர் சமூகத்துடன் இணைந்து இது தொடர்பாக மேற்கொள்ள  முடியுமான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தயங்கபோவதில்லை என்று தெரிவித்துக்கொள்கின்றது.

Loading