2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம்திகதி
விவசாயிகளின் காணிகளை பறிமுதல் செய்யும் சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்ற உள்ளது
காணி அபிவிருத்தி சட்டத்தின் சீர்திருத்தத்திற்கான இரண்டாம் வாசிப்பு கடந்த வெள்ளி பாராளுமன்றதில் நடைபெற்று நிறைவேறியது. இந்தசட்டம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தின் போது விவசாயிகளின் கடன் பிரச்சனை பற்றிய பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்களின் அறிவின்மை வியப்பை தருகிறது. விவசாயிகள் தமது காணிகளை வங்கிகளில் அடகு வைத்து கடன் எடுப்பதே அவர்களது கடன் பிரச்சனைக்கு தீர்வு என பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துகளை முன்வைத்திருந்தார்கள்.
இந்த சட்டசீர்திருத்தத்தின் பாரதூரமான விளைவுகள் பற்றி சட்ட கூட கலந்தாலோசிக்க காலம் விடாது இச்சட்டம் அவசர அவசரமாக வாக்களிப்பிற்குட்படுத்தப்பட்டு நிறைவேறியது.
காணி சீர்திருத்த சட்டமானது ‘அரச மானியக்காணி உரித்தாளர்கள் அரச தலையீடு அற்று தமது காணி உரிமைகளை பெற்று சுயாதீனமாக இயங்க வழிவகுக்கின்றது’ இது ‘முற்போக்கானது’ என்ற அரசின் பரப்புரை இச்சீர்திருத்தத்தை கொண்டுவருவதற்காக மக்களை திசை திருப்பும் அப்பட்டமான பொய். மேலும் பெண்களின் காணி உரிமைகளை வழங்குகின்ற போர்வையில் இந்த சீர்திருத்தம் கொண்டு வரப்படுகின்றது. எனினும் கடந்த காலங்களில் பெண்களின் உரிமைகளை வழங்குதல் என்ற பெயரில் தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்க சட்டங்கள் இயற்றியதை போன்று இன்று காணி உரிமைகளை பறிக்கவும் பெண்களின் உரிமைகளை ஈடுபொருளாக பயன்படுத்தியுள்ளது அரசாங்கம்.
அரச அதிகாரியின் அனுமதி இல்லாமல் அரசமானியக்காணி உரித்தாளர் வங்கிகளில் தமது காணிகளை அடகுவைப்பதற்கான சரத்துக்களை கொண்டுவருகிறது இக்காணி சீர்திருத்தச்சட்டம். எனவே தனியார் வங்கிகள் எந்தவிதமான கட்டுப்பாடும் இன்றி அரச மானியக்காணிகள் உள்ளவர்களை அணுகி கடன்களை வழங்குவதன் பெயரில் காணிகளை அடகு வைக்க தூண்டுவதற்கான அனுமதியையே இந்த சட்டம் வழங்குகிறது.எமது விவசாயிகள் கடன் சுமை தாங்காது தமது காணிகளை தனியார் வங்கிகளுக்கு அடகுவைத்து காணிச்சந்தையில் இழப்பதற்கான முதற் கட்ட ஏற்பாடே இது என்பதை நாம் தெரிவிக்கிறோம்.
இதுவரை காலமும் காணி உடைமையை பாதுகாப்பதற்காக இலங்கையில் காணப்பட்ட சட்டங்களை கபடத்தனமாக மாற்ற முனைகிறது இந்த சட்ட சீர்திருத்தம். மேலும் எமது மக்களின் அன்றாட வாழ்க்கை நிலவரத்தை கூட கருத்தில் கொள்ளாது வங்கிகளுக்கும் நிதிநிறுவங்களுக்கும் எமது மக்களின் காணிகளை வாரி வழங்க வழிவகுக்கிறது இந்த சட்ட சீர்திருத்தம்.
வங்கிகள் கடன் மதிப்பீடு மூலமாக தான் கடன் வழங்கும் என்ற ஒரு கருத்து பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. கடந்த தசாப்த காலமாக நுண்கடன் கம்பெனிகளும் வங்கிகளும் எந்த வித கட்டுப்பாடும் இன்றி ஊடுருவி மக்களுக்கு ‘இலகுவாக மீளச் செலுத்தும் திட்டம்’ என்ற பெயரில் மக்களுக்கு நுண் கடன் திட்டங்களை அள்ளி வழங்கின. மக்களும் தவறாக திசை திருப்பப்பட்டு தமது பொருளாதார சுமையை தீர்ப்பதற்கு கடன் பெற்றுக் கொண்டனர். அதன் பின் மறைமுகமான பெரும் வட்டியை மக்கள் மீது திணித்து எடுத்த கடனை விட திரும்ப செலுத்தும் பணம் பன்மடங்காகி மீளமுடியா கடன் சுமைக்கு ஆட்பட்டனர் மக்கள். இதனால் தற்கொலைகள் அதிகரித்தன. பாலியல் சுரண்டல் அதிகரித்தது. போசாக்கின்மை அதிகரித்தது.
தனியார் நிறுவனங்களையும் வங்கிகளையும் மேற்பார்வை இல்லாமல் மக்களை நாடவைப்பதன் விளைவை நுண்கடன் கம்பனிகளினாலும் வங்கிகளினாலும் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார சமூக சுரண்டல் மூலம் நாம் கண்டு கொண்டோம். தற்போது நடைமுறையில் உள்ள காணி அபிவிருத்தி சட்டம் அரசாங்க அதிபரின் மேற்பார்வையின் கீழே கடன் பெறலாம் என்ற பாதுகாப்பை கொண்டுள்ளது.
இந்த பாதுகாப்பை இல்லாமல் ஆக்குவதனால் அரசாங்கம் காணும் இலாபம் என்ன? வங்கிகள் மக்களிடம் இருந்து காணிகளை சூறையாட அரசாங்கம் துணைபோகிறதா? எமது விவசாயிகளின் கடைசி சொத்தாகிய காணியையும் இழக்கச் செய்து வங்கிகளுக்கு இலாபத்தை ஈட்டித்தர அரசாங்கம் ஏன் முனைகிறது?
சில நாட்களுக்கு முன்னர் MCC என்ற அமெரிக்க நிறுவனம் இலங்கையுடன் மீண்டும் பேர்ச்சுவார்தையில் ஈடுபட வந்துள்ளது. இந்த அமெரிக்க நிறுவனம் எமது காணிகளை வெளிநாட்டு கம்பெனிகள் இலகுவாக பெற்றுக்கொள்வதற்கு திட்டத்தை வகுத்துத்தரும் ஒரு நிறுவனம். எனவே எதற்காக வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் மாத்திரம் காணிகளை அடகு வைக்கலாம் என்ற சட்ட ஏட்பாடு கொண்டு வரப்படுகிறது என்ற அரசாங்கத்தின் திட்டம் வெட்ட வெளியாகிறது.
எனவே கீழ்கையொப்பமிடும் நாம் அரசாங்கத்திடம் இருந்து பின்வருவனவற்றை கோருகின்றோம் :
- காணிஅபிவிருத்தி சீர்திருத்தச்சட்டத்தின் 4வது, 9 வது சரத்துகளை மீளப்பெற வேண்டும்
- பாராளுமன்றத்தில் தமக்கு இருக்கும் பெரும்பான்மை வாக்குகளை பயன்படுத்தி சிறுவிவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வரவேண்டாம் என்று கோருகின்றோம்
- இந்த சீர்திருத்தச் சட்டம் கொண்டு வரப்படுமாயின் விவசாயிகள் தமது காணிகளை வங்கிகளுக்கு இழந்து காணியற்றவர்காளாக்கப்படும் சூழ்நிலையை உருவாக்கியதற்கான பொறுப்பை இந்த அரசாங்கமே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று நாம் அரசாங்கத்திற்கு நினைவுபடுத்தி நிற்கின்றோம்.
கையொப்பம்:
- All Employees Union of Information and Telecommunication
- Ceylon Federation of Trade Unions
- Ceylon Mercantile Industrial & General Workers Union (CMU)
- Ceylon Teachers’ Union (CTU)
- Commercial and Industrial Workers’ Union (CIWU)
- Dabindu Collective Sri Lanka
- Dabindu Movement
- Eastern Social Development Foundation (ESDF)
- Federation of Media Employees Trade Unions
- Hashtag Generation
- Human Elevation Organisation (HEO), Ampara
- Human Rights Office (HRO), Kandy
- Institute of Social Development (ISD)
- Liberation Movement
- Movement for National Land and Agricultural Reform (MONLAR)
- National Fisheries Solidarity Organisation (NAFSO)
- People’s Alliance for Right to Land (PARL)
- Protect Union
- Revolutionary Existence for Human Development (RED)
- Right to Life (R2L) Human Rights Centre
- Shramabhimani Kendraya
- Sisterhood Initiative
- Sri Lanka All Telecommunication Employees Union
- Standup Movement Lanka
- Standup Workers Union
- Telecommunication Engineering Diplomates Association
- United Federation of Labour
- United General Services Union
- Women Aid Network
- Women’s Action Network (WAN), Mannar
- Women’s Development Federation
- Young Lawyers Association