இன்று காலை கோலாகலமாக ஆரம்பமாகும் ‘அக்கரைப்பற்று புத்தகக் கண்காட்சி’ யோடு இணைந்ததாக ‘வழித்தடம்’ சஞ்சிகையும் வெளியாகிறது. அதன் ஆசிரியர்குழுவில் ஒருவனாக தோழர் சிராஜ் மஷ்ஹூரை பிரதம ஆசிரியராகக் கொண்டு தோழர்கள் கருணாகரன் , அம்ரிதா ஏயெம் ஆகியோருடன் இந்த முயற்சியில் இணைந்து இருப்பதில் பெருமகிழ்ச்சி.
இலங்கைத் தமிழ்ச் சிறுகதை முன்னோடிகள் – நூல்வரிசை என ஐந்து சிறுகதை எழுத்தாளர்களின் தலா இரண்டு கதைகள் வீதம், நண்பர்கள் நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு நூலைத் தொகுத்து Pages புத்தக இல்ல வெளியீடாக கொண்டு வருகிறோம்.
நூல்வரிசை 1 – பித்தன் ஷா
நூல்வரிசை 2 – அ.செ. முருகானந்தம்
நூல்வரிசை 3 – வ.அ. இராசரத்தினம்
நூல்வரிசை 4 – தெளிவத்தை ஜோசப்
நூல்வரிசை 5 – எஸ்.எல்.எம். ஹனீபா
என அமையும் ஐந்து நூல்களும்
‘பாதி குழந்தை இருளும் ஒளியும்’
‘காளிமுத்துவின் பிரஜாவுரிமை பழையதும் புதியதும்’
‘ தோணி தாய்’
‘பாட்டி சொன்ன கதை எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்’
‘மக்கத்துச் சால்வை மருமக்கள் தாயம்’
ஆகிய தலைப்புகளில் வெளிவருகிறது. விலை 100/-
தெளிவத்தை ஜோசப் ஐயா எழுதிய கதைகள் இரண்டைத் தொகுக்கும் பணியை Pages பதிப்பக நிறுவுனர் சிராஜ் மஷ்ஹூர் பாக்யா பதிப்பக நிறுவுனரான என்னைக் கேட்டுக் கொண்ட மன எண்ணம் மகத்தானது.
அதற்காக அவரது ‘நாமிருக்கும் நாடே’ தொகுதியில் இருந்து ‘பாட்டி சொன்ன கதை’ யையும், ‘தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள்’ தொகுதியில் இருந்து ‘எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்’ ஆகிய கதைகளைத் தெரிந்து எடுத்துள்ளேன்.
ஐந்து நூல்களினதும் அட்டைப்பட வடிவமைப்பு, ஒப்புநோக்கல் என நேற்று நாள்முழுவதும் எனக்கு ஒரே ‘தீபாவளி’ தான். வடிவமைப்பாளர் அஸார் வசீம், அச்சகர் சியாம் ஆரிப் ஆகியோருடன் ‘சாப்பாடு அடிச்சு’க் கொண்டு பிளேன்டீ, வடை கடித்துக் கொண்டே தீபாவளி கலகலப்பாக கழிந்தது.
நாளை இந்த நூல்வரிசையை கண்காட்சியில் வாங்கலாம். இன்று அதிகாலையே மு. நித்தியானந்தனின் ‘கூலித் தமிழ்’ நூலுடன் அக்கரைப்பற்று கண்காட்சி வளாகத்தை அடைந்துவிட்டார்; மதன்.
கடந்த ஆண்டு களத்தில் நின்றவன்
நேரம் வாய்த்தால் வருகிறேன். புத்தகங்களைக் கொண்டாடுவோம்.